பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவருக்கு பிறந்த குழந்தையின் பிறப்புச்சான்றிதழ் எப்படி? !!
கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா பவலும் (வயது 21). பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஜஹாத்தும் (23) 3 ஆண்டுகளாக இணைந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், ஜஹாத் கர்ப்பம் தரித்தார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது.
இது அந்த தம்பதியரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி உள்ளது. அதே நேரத்தில் அவர்கள் இன்னும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர். ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கைக்கும், பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பிக்கும் குழந்தை பிறந்திருப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இந்தத் தம்பதியரின் குழந்தைக்கு பிறப்புச்சான்றிதழில் தாய், தந்தை என யார் பெயர் இடம் பெறப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்ப்பம் தரித்து குழந்தை பெற்ற ஜஹாத், பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் என்பதால் குழந்தையின் பிறப்புச்சான்றிதழில் தனது பெயர் தந்தைக்குரிய இடத்திலும், ஜியா பவல் தனது பெயர் தாய்க்குரிய இடத்திலும் வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இது தொடர்பாக அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளனர். இதுபற்றி ஜியா பவல் கூறியதாவது:- குழந்தையின் பிறப்புச்சான்றிதழில் எனது பெயர் தாயாகவும், ஜஹாத் பெயர் தந்தையாகவும் குறிப்பிடப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இது தொடர்பாக ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் கடிதம் அளித்துள்ளோம்.
சமீபத்திய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளின்படியும், திருநங்கையர் சட்டம் 2019 படியும், எங்களுக்கு எங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை உள்ளது. எங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள அடையாள அட்டை உள்ளது. எனவே இதில் சட்டத்தடை ஏதும் இருக்காது. குழந்தையும் குழந்தையைப் பெற்றெடுத்த ஜஹாத்தும் நலமுடன் உள்ளனர். நானும், ஜஹாத்தும் இந்த மகிழ்ச்சியான நாட்களின் ஒவ்வொரு துளியையும் அனுபவித்து கொண்டாடி வருகிறோம். எங்களுக்கு குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
இது எங்கள் சொந்தக் குழந்தை.. எங்கள் குழந்தையின் மீது யாரும் உரிமை கொண்டாட முடியாது.. அதன் உண்மையான பெற்றோர் நாங்கள்தான் என்பதால் அந்த குழந்தை எங்களை விட்டு ஒருநாளும் போகாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். குழந்தைக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து தேவைக்கேற்ப தாய்ப்பாலை ஆஸ்பத்திரி அதிகாரிகள் பெற்றுத்தருகின்றனர். எங்களுக்கு எல்லா விதத்திலும் அவர்கள் உதவியும் வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.