150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!
நீரிழிவு நோயாளிகளுக்கான இன்சுலின், மெட்ஃபோர்மின், இதய நோயாளிகளுக்கான அஸ்பிரின், குழந்தைகளுக்கான சிரப், மயக்க மருந்து மற்றும் புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
1, 300 அத்தியாவசிய மருந்துகளில் 140 முதல் 150 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சில அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு ஜனவரி இறுதிக்குள் தீர்ந்துவிட்டதாகவும் அந்த மருந்துகளை பிரதியீடு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், சில வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் மருந்துப் பற்றாக்குறையால் சத்திரசிகிச்சைகள் சில இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் அதிகரித்து வரும் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு கிடைக்காமையால், பல வைத்தியசாலைகளில் மருத்துவப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் மருத்துவக் களஞ்சியங்களிலும் மாகாணப் பகுதிகளிலும் மட்டுப்படுத்தப்பட்ட மருந்துப் பொருட்கள் மட்டுமே இருப்பதாக சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் மருத்துவ சங்கங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.