;
Athirady Tamil News

மலையக தமிழர் குறித்து அதிக அக்கறை வேண்டும் !!

0

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் அதிக அவதானம் காட்டவேண்டும். தொப்புள் கொடி உறவுகளான எம்மீது, இந்தியாவின் குறிப்பாக இந்திய மத்திய அரசாட்சி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அக்கறை இன்னமும் கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் எதிர்பார்க்கிறோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்தார்.

இலங்கைக்கு வருகைதந்த மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தமிழக கிளை தலைவர் கே. அண்ணாமலை ஆகியோருக்கும், இலங்கை அரசியல் சமூக தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பை இந்திய தூதரகம், ஞாயிற்றுக்கிழமை (12) ஏற்பாடு செய்திருந்தது.

அந்த சந்திப்பிலேயே முருகன் மற்றும் அண்ணாமைலை ஆகியோரிடம் மனோ எம்.பி மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்ததுடன், அங்கு மேலும் தெரிவித்ததாவது,

“இந்தியாவை எந்த கட்சி ஆள்கிறது என்பது இந்திய உள்விவகாரம். அதில் நாம் தலையிடோம். இப்போது ஆள்கின்ற கட்சி உங்கள் பாரதிய ஜனதா கட்சி. ஆகிய நீங்கள் இருவரும் உங்கள் கட்சியின் இரண்டு பிரதான ஆளுமைகள்.

உங்கள் கட்சி, அரசாங்கம் சார்பில் நீங்கள் இருவரும், மலையக தமிழர் தொடர்பில் அதிக அவதானம் காட்டவேண்டும்.

தென் தமிழக மாவட்டங்களில் இருந்து சரியாக 1823 ஆண்டு முதல் இலங்கைக்கு ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்டு, 2023இல் 200 ஆண்டுகளை இலங்கையில் நிறைவு செய்யும் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் உங்கள் அரசும், நாடும் மிக அதிக அக்கறையை கொள்ள வேண்டும் என நான் கோருகிறேன்.

1964ஆம் ஆண்டின் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் எம்மை இந்நாட்டில் பலவீனப்படுத்தி விட்டது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, நமது மக்கள் நாடு கடத்தப்பட்டு இருக்காவிட்டால், இன்று இலங்கை பாராளுன்றத்தில் சுமார் 25 மலையக தமிழ் எம்பிக்கள் இருந்திருப்போம்.

வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிகளுடன் சேர்த்து சுமார் 50 தமிழ் எம்பிக்கள் அரசியல் பலத்துடன் இலங்கையில் இருந்திருக்க வேண்டிய நிலைமையை சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் இல்லாமல் செய்து விட்டது.

அந்த சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் எஞ்சியவர்களுக்கு இலங்கை முழு குடியுரிமை வழங்க வேண்டும். இன்று சட்டப்படி குடியுரிமை இருக்கிறது. ஆனால், காணி, கல்வி, வீட்டு, சுகாதார உரிமைகள் இந்நாட்டின் ஏனைய குடிமக்களுக்கு சமானமாக எமது மக்களுக்கு இல்லை.

ஆகவே, முழு குடியுரிமை இல்லை. இதற்காகவே நாம் ஜனநாயகரீதியாக இலங்கைக்கு உள்ளே போராடுகிறோம். இதை இலங்கை அரசுக்கு ஞாபகப்படுத்தி பெற்று தர வேண்டிய கடப்பாடு இந்திய அரசுக்கு இருக்கிறது.

எங்கள் மக்கள் எழுச்சி அடைய முதல் தேவை, கல்வி எழுச்சியே. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் ஆகிய பாடங்களை இடைநிலை, கபொத சா/த. உ/த, வகுப்புகளில் எமது பிள்ளைகளுக்கு தமிழ் மொழியில் போதிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. இதற்காக உங்கள் நாட்டு ஆசிரியர்கள் இங்கே வந்து எமது பாடசாலைகளில் கற்பிப்பதை இந்நாட்டு ஆசிரிய தொழில் சட்டங்கள் ஏற்காது.

நமது ஆசிரிய பணி விண்ணப்பதாரிகளை நாம் இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம். ஆகவே ஒரே வழி, எமது மக்களுக்கான விசேட ஒதுக்கீட்டு திட்டத்தின் அடிப்படையில், இங்கே ஆசிரிய பயிற்சிகளை நடத்த கலாசாலை அமைத்து, அதற்கு தமிழகத்தில் இருந்து கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தொழில்நுட்பம் பாட ஆசிரிய பயிற்சிகளை வழங்க பயிற்சியாளர்களை அனுப்புவதாகும்.

இந்த திட்டத்தை உங்கள் அரசு உடன் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதற்கான உள்நாட்டு அனுமதிகளை, கட்டமைப்புகளை இலங்கை ஜனாதிபதியுடன் பேசி நாம் செய்து தருவோம்” என்றார்.

அமைச்சர் முருகன், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, இந்திய தூதுவர் கோபால் பாகலே, அமைச்சர் ஜீவன் தொண்டமான், எம்பி ரிசாத் பதுர்தீன், இதொகா தலைவர் செந்தில் தொண்டமான், கோபியோ இலங்கை கிளை தலைவர் குமர் நடேசன், வர்த்தகர் கோபால்சாமி ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.