சரத்பவார் ஆதரவோடு தான் 2019-ல் அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம்: பட்னாவிஸ் பகீர் தகவல்!!
மராட்டியத்தில் 2019-ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்-மந்திரி பதவியை பகிர்வதில் ஏற்பட்ட தகராறை அடுத்து சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறியது. அந்த கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தது.
அந்த நேரத்தில் திடீரென தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் அதிகாலை 5 மணிக்கு ராஜ்பவனில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றனர். ஆனால் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் அந்த ஆட்சி பதவி ஏற்ற 3 நாளில் கவிழ்ந்தது. இந்தநிலையில் சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் கழித்து சரத்பார் ஆதரவோடு தான் 2019-ல் அஜித்பவாருடன் சேர்ந்து ஆட்சி அமைத்தோம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் டி.வி. நிகழ்ச்சியில் கூறியதாவது:- நிலையான அரசு தேவைப்பட்டதால் ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரசிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆட்சி அமைக்க நாங்கள் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தையின் போது சரத்பவாரும் இருந்தார். ஆனால் அதன் பிறகு நிலைமை மாறியது. நிலைமை எப்படி மாறியது என நீங்களே பார்த்தீர்கள். நேர்மையாக அஜித்பவார் என்னுடன் பதவி ஏற்றுக்கொண்டார். இவ்வாறு அவர் கூறினார். தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட தகவலை சரத்பவார் மறுத்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “தேவேந்திர பட்னாவிஸ் ஜென்டில் மேன், பண்பட்டவர் என்று நினைத்தேன். அவர் பொய்யை நம்பி இதுபோன்ற ஒரு அறிக்கையை விடுவார் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை.” என்றார். இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பா.ஜனதா, தேசியவாத காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டது. 2 தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பதிவிட்டனர்.