;
Athirady Tamil News

வன்முறையை கையில் எடுப்பதனை அனுமதிக்க முடியாது!!

0

இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்தார்.

அது தொடர்பில் அமைச்சரின் ஊடாக பிரிவினரால் அனுப்பப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது. எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும்.

இலங்கையின் கடல் வளத்தினை அழிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்குபல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.

இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அவை போதுமானளவு பலனளிக்காத நிலையில், அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இந்தியத் தலைவர்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி வருகிறேன்.

இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் இந்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடனும் இவ்விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்திருந்ததுடன், விரைவில் புதுடெல்லி மற்றும் தமிழகத்தின் மேலும் பல உயர் மட்டத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுக்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறான சூழலில், இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறல்கள் சடுதியாக அதிகரித்துள்ளமை கவலை அளிக்கிறது என அமைச்சர் தெரிவித்ததாக செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.