;
Athirady Tamil News

குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை; தலைமறைவாகியிருந்த நபர் கைது!!

0

குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சமூக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாநகர் அத்தியடியில் 55 வயதுடைய தாய் நேற்றுமுன்தினம் இரவு அடித்து கொலை செய்யப்பட்டார்.

“கணவனை பிரிந்து வாழும் அவர் பெண் பிள்ளை ஒருவருடன் வசித்து வந்தார்.

அவரது வீட்டிற்கு வேலைகளுக்காக ஒருவர் நீண்டகாலமாக தினமும் வருவது வழமை. நேற்றுமுன்தினம் காலையும் அவர் வழமைபோல வருகை தந்து இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

குடும்பப்பெண்ணுடன் அவர் முரண்பட்டு வாய்த்தக்கம் செய்துள்ளார். வீட்டுக்குள் இருந்த பெண் பிள்ளை சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை் தாயார் குருதி தோய்ந்த நிலையில் நிலத்தில் சரிந்து காணப்பட்டார்” என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்து தலைமறைவாகிய நபர் நாவற்குழியில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

“உயிரிழந்த பெண்ணுடன் 10 ஆண்டுகளாக நட்பு உறவாடி வருகின்றேன். அவர்கள் வீடு மாறுவதற்கு உதவுவதிலிருந்து பல உதவிகளை வழங்கி வந்தேன்.

அண்மையில் கோப்பாயில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்கு அவரது காணி ஒன்றை விற்பனை செய்து பணத்தையும் வழங்கினேன்.

தண்ணீர் குழாயை நிலத்துக்கு அடியால் புதைப்பதற்காக கிடங்கு வெட்டச் சொன்னார். எனது வீட்டில் கூலிக்கு வேலைக்கு போவதாக அறிந்தால் பிரச்சினை என நான் கூறிய போது, அவர் என்னை சமூக வேறுபாடு சொல்லி பேசிவிட்டார். அதனால் ஆத்திரத்தை அவரை கட்டையால் தாக்கிவிட்டேன். அவர் உயிரிழந்துவிட்டார்” என்று சந்தேக நபர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.