அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா திடீர் தடை!!
தைவானுக்கு ஆயுதங்களை சப்ளை செய்த அமெரிக்க நிறுவனங்கள் மீது சீனா பொருளாதார தடை விதித்துள்ளது. சீனாவில் இருந்து கடந்த 1949ல் தைவான் தனியாக பிரிந்தது. தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ராணுவ பலத்தால் பெரும் நிலப்பரப்பு கொண்ட சீனாவுடன் தைவானை இணைப்போம் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறி வருகிறது. தைவானை அடிபணிய வைக்கும் வகையில் சீன போர் விமானங்கள், கடற்படை கப்பல்கள் தைவான் தீவுக்கு அருகில் அடிக்கடி போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தைவானுடன் வேறு எந்த நாடுகளும் உறவு வைக்ககூடாது என சீனா எச்சரித்து வருகிறது. அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் அதிகாரப்பூர்வ தொடர்பு இல்லை. எனினும், தைவானுடன் வர்த்தக உறவுகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. தைவான் ராணுவத்துக்கு ராணுவ தளவாடங்களை அமெரிக்கா சப்ளை செய்து வருகிறது.
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேசன் மற்றும் ரேதியோன் டெக்னாலஜிஸ் கார்ப்பரேசன் நிறுவனங்கள் தைவான் ராணுவத்துக்கு ரேடார்கள்,ஹெலிகாப்டர்கள், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கருவிகளை விற்பனை செய்துள்ளன. இந்நிலையில்,லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் ரேதியோன் நிறுவனங்களுக்கு சீனா அதிரடியாக வர்த்தக தடை விதித்துள்ளது. இதன் மூலம் இந்த இரண்டு நிறுவனங்களும் சீனாவில் புதிய முதலீடுகள் மற்றும் பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது என சீன வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.