;
Athirady Tamil News

ஆம்புலன்சுக்கு பணம் இல்லாததால் பரிதாபம்: அரசு ஆஸ்பத்திரியில் இறந்த குழந்தையின் உடலை 120 கி.மீ.பைக்கில் எடுத்துச் சென்ற தம்பதி!!

0

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், குமடா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மத்திஷ்ராய ராஜு. இவரது மனைவி மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு கடந்த 2-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் மகேஸ்வரியை படேரு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தார். அங்கு மகேஸ்வரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இருந்தனர்.

ஆனால் அவர்களது மகிழ்ச்சி ஒரு நாள் கூட நிலைத்திருக்கவில்லை. இந்நிலையில் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். குழந்தை நேற்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இறந்து போன குழந்தையை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தர வேண்டும் என குழந்தையின் தந்தை ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டார்.

ஆனால் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் மத்திஷ்ராய ராஜு கோரிக்கையை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் ஆம்புலன்ஸ் கேட்டு கெஞ்சி கதறி அழுதார். ஆனாலும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மனம் இறங்காமல் கல் நெஞ்சம் படைத்தவர்களாக இருந்தனர். இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸை நாடிய போது அவர்கள் அதிக அளவில் பணத்தை கேட்டனர்.

அந்த பணத்தை கொடுக்க குழந்தையின் தந்தையால் முடியவில்லை. செய்வது அறியாமல் தவித்த குழந்தையின் தந்தை குழந்தையை பைக்கில் கொண்டு செல்ல முடிவு செய்தார். ஊரிலிருந்து நண்பர்கள் கொண்டு வந்த பைக்கின் பின்னால் மனைவி குழந்தையை வைத்துக்கொண்டு 120 கி.மீ தொலைவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றார்.

இறந்து போன குழந்தையை பைக்கில் எடுத்துச் செல்வதைக் கண்டவர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தார். இதனை ஒரு சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மருத்துவ துறை இயக்குனர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.