;
Athirady Tamil News

பருத்தியை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு அரசு முன்வர வேண்டும் – அன்புமணி ராமதாஸ் டுவிட்!!

0

பருத்தி கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் அரசே நேரடியாக கொள்முதல் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் நடப்பாண்டில் அதிக பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தையில் அதன் கொள்முதல் விலை அண்மைக்காலங்களில் இல்லாத அளவில் கிலோவுக்கு ரூ.75/குவிண்டாலுக்கு ரூ.7,500 என்ற அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இதனால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ பருத்திக்கான உற்பத்திச் செலவு ரூ.100க்கும் மேல் ஆகிறது. உழவர்கள் கடன் வாங்கித் தான் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். உற்பத்திச் செலவை விட குறைந்த விலைக்கு பருத்தியை விற்க நேரிட்டால் உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு மீளமுடியாத கடன் வலையில் சிக்கிக் கொள்வார்கள். கடந்த ஆண்டில் ஒரு கிலோ பருத்தி ரூ.130 வரை விற்பனை ஆனது. அதை வணிகர்கள் நூற்பாலைகளுக்கு கிலோ ரூ.225 வரை விற்பனை செய்தனர்.

இப்போது கொள்முதல் விலை குறைந்தாலும், விற்பனை விலை அதிகமாகவே உள்ளது. அதனால் வணிகர்கள் மட்டுமே லாபம் அடைகின்றனர். தமிழ்நாடு அரசே பருத்தியை கொள்முதல் செய்தால் உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வெளிச்சந்தையிலும் விற்பனை விலை உயராது. எனவே, ஒரு கிலோ பருத்தியை குறைந்தது ரூ.125 என்ற விலையில் நேரடியாக கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.