;
Athirady Tamil News

கலெக்டர்-எம்.எல்.ஏ., நேரில் வந்து சந்திக்க வேண்டும்: திருப்பூர் ரெயில் நிலையத்தில் கத்தியுடன் புகுந்து மிரட்டிய வாலிபர்!!

0

திருப்பூர் ரெயில் நிலையத்திற்குள் இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று உள்ளே நுழைந்தார். முதல் பிளாட்பாரம் டிக்கெட் கவுண்டரில் பயணிகள் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு கத்திக்கொண்டே ஓடி சென்ற அந்த நபர், கையில் கத்தியை வைத்துக்கொண்டு பயணிகளுக்கு மிரட்டல் விடுத்தார். மேலும் கத்தியை வைத்து தனது கையை கீறி கொண்டு கூச்சலிட ஆரம்பித்தார்.கலெக்டர்-எம்.எல்.ஏ., இங்கு வரவேண்டும், தனது பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என சத்தம் போட்டார். இதை பார்த்து டிக்கெட் எடுக்க வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிக்கெட் கவுண்டரில் இருந்து அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெகடர் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்னம், போலீஸ்காரர் கோபி உள்ளிட்ட போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேடிக்கை பார்க்க திரண்ட பயணிகளை அங்கிருந்து வெளியேற்றினர். இதனிடையே அந்த வாலிபர் என்ன செய்வது என்று தெரியாத அளவிற்கு தகாத வார்த்தைகளை பேசி போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் மிரட்டல் விடுத்தார்.

அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சுமார் 2 மணி நேரம் ரெயில்வே டிக்கெட் கவுண்டரின் முன்புறமாக நின்று அந்த வாலிபர் கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு மிரட்டல் விடுத்து கொண்டு இருந்தார். அவர் கையில் கத்தி வைத்திருந்ததால் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் போலீசார் சாமர்த்தியமாக அவரிடம் பேச்சுக் கொடுத்து கொண்டே இருந்தனர். அந்த வாலிபர் தொடர்ச்சியாக ஆவேசமாக மிரட்டல் விடுத்து கொண்டே இருந்ததால் தீயணைப்புத் துறையினர் மற்றும் திருப்பூர் வடக்கு போலீஸ் உள்பட சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து அந்த வாலிபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர் கவச உடைகள், வலைகள் சகிதம் அந்த வாலிபரை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். கோபி என்ற போலீஸ்காரர் தொடர்ச்சியாக பேச்சு கொடுத்து கொண்டே இருந்தார். சுமார் 2 மணி நேரத்துக்கு பின் காலை 6 மணியளவில் அவரிடம் இருந்த கத்தியை தட்டிவிட்டு அதிரடியாக அந்த வாலிபரை பிடித்து குண்டு கட்டாக தூக்கி சென்றனர். அந்த வாலிபர் மயக்கம் அடைந்தது போல நடித்ததால் அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த கண்ணன்(வயது 36) என்பதும், அவரது மனைவி ராணி, மகன் தமிழ் செல்வன்(16) ஆகியோருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்து வெளியேறி திருப்பூர் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர் பகுதியில் கத்தியுடன் புகுந்ததும், பயணிகளை மிரட்டியதும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம் முதல் பிளாட்பாரம் பகுதியில் டிக்கெட் வழங்கும் சேவை பாதிக்கப்பட்டது. 2-வது பிளாட்பார டிக்கெட் கவுண்டரில் மட்டும் டிக்கெட் வழங்கப்பட்டது. காலை 6 மணிக்கு அந்த வாலிபரை பிடித்த பிறகு முதல் பிளாட்பாரத்திலும் டிக்கெட் வழங்கப்பட்டது. அதிகாலையில் பயணிகளை கத்தியை காட்டி மிரட்டியதுடன், போலீசாரை படாத பாடுபடுத்திய வாலிபரால் திருப்பூர் ரெயில் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.