;
Athirady Tamil News

மட்டக்களப்பில் டெங்கினால் இளைஞர் உயிரிழப்பு : ஒரே நாளில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

0

மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது இளைஞரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார்.

அத்துடன் குறித்த மாவட்டத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மட்டும் 14 பேர் டெங்கு நுளம்பு நோய்த் தாக்கத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது:

ஏறாவூர் ஜயங்கேணி பாரதி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய பகீரதன் தனுஷ்கரன் என்கிற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் டெங்கு நுளம்பு தாக்கத்துக்குள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 16ஆம் திகதி மட்டு. போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை தற்போது அவ்வப்போது மழை பெய்துவரும் காரணத்தால் டெங்கு நுளம்பின் பெருக்கம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மட்டு. டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தினால் களுவாஞ்சிக்குடியில் 2 பேரும், காத்தான்குடியில் ஒருவரும், செங்கலடியில் 2 பேரும், வாழைச்சேனையில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தியில் 4 பேரும், மட்டக்களப்பில் 4 பேரும் என 14 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் வீட்டில் ஒரு நுளம்பை கண்டாலும் சுற்றுப்புறச் சூழலை துப்புரவு செய்யுங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் அரச வைத்தியசாலைக்கு சென்று உடனடியாகவே மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். காய்ச்சல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்தால் இரத்த பரிசோதனை செய்யுங்கள். காய்ச்சலுக்கு பரசிட்டமோலை தவிர வேறு மருந்துகளை ஒருபோதும் உட்கொள்ளாதீர்கள்.

‘ஒரு நுளம்பு உன்னை நாளை கொல்லும்; நீ அதை இன்றே கொல்லாவிடில்’ என்பதனை மனதில் நிறுத்திக்கொண்டு பொதுமக்கள் தமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் டெங்கு நுளம்பு தொடர்பாக எச்சரிக்கையாகவும் அவதானமாகவும் செயற்படுங்கள் என அவர் கேட்டுக்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.