துருக்கி, சிரியா நிலநடுக்கம் பலி 46 ஆயிரத்தை தாண்டியது.! 11 மாகாணங்களில் சுமார் 3,45,000 குடியிருப்புகள் சேதம்!!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 46,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் துருக்கி மற்றும் வட சிரியாவில் கடந்த 6ம் தேதி 7.8 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சரிந்து இடிந்து விழுந்தன. எங்கு பார்த்தாலும் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கிறது. இந்த கட்டிடக் குவியல்களிடையே உயிருக்கு போராடி வருபவர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் படை, நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
உடமைகளை இழந்த லட்சக்கணக்கான மக்கள் அடிப்படை தேவைகளுக்காக காத்திருக்கின்றன. இடிபாடுகளிடையே சிக்கிய உயிருள்ளவர்களை மீட்கும் பணி தொடரும் அதே நேரத்தில், அதனிடையே இருந்து மீட்கப்படும் சடலங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46,000ஐ தாண்டியது. துருக்கியில் மட்டும் 11 மாகாணங்களில் சுமார் 3,45,000 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதால், ஆயிரக்கணக்கானோரின் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. துருக்கியில் மட்டும் 40,402க்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.