‘குழந்தை பிறப்பை தடுக்க வெளிநாட்டு சதி’கருத்தடை மாத்திரைக்கு ஆப்கானிஸ்தானில் தடை: தலிபான்கள் அதிரடி உத்தரவு!!
ஆப்கானிஸ்தானில் கருத்தடை மாத்திரை மற்றும் ஊசி போன்றவற்றை விற்கவும் பயன்படுத்தவும் தலிபான்கள் திடீர் தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பெண்கள் உயர்கல்வி பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லவும், வெளியிடங்களுக்கு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுத்த கட்டமாக கருத்தடை மாத்திரைகளுக்கும் தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
முதற்கட்டமாக காபூல் மற்றும் மஸார் இ ஷெரிப் ஆகிய இரு முக்கிய நகரங்களிலும் இந்த தடை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் பொது சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்றாலும், அனைத்து மருந்தகங்களிலும் துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
கருத்தடை சாதனங்கள், மருந்து, மாத்திரைகளை பயன்படுத்த கூடாது, விற்கக் கூடாது என மருந்தகங்களிலும், மருத்துவ பணியாளர்களுக்கும் நேரடியாக சந்தித்து எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மேற்கத்திய நாடுகளின் சதியே கருத்தடை மாத்திரைகள் என தலிபான்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஏற்கனவே பலவீனமான சுகாதார அமைப்பைக் கொண்ட ஆப்கானிஸ்தானில் 14ல் ஒரு பெண் கர்ப்பம் தொடர்பான விஷயங்களில் இறக்கிறார். பிரசவத்தில் உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஆப்கானிஸ்தானும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.