அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறியது ரஷியா!!
அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. 1991ல் போடப்பட்ட ஒப்பந்தம் காலாவதியான நிலையில், 2010ம் ஆண்டு புதிய தொடக்கம் என்ற பெயரில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 2021ல் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா தற்காலிகமாக வெளியேறியது. அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் பங்கேற்பதை ரஷியா தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பாராளுமன்றத்தில் பேசினார். ரஷியா இன்னும் ஒப்பந்தத்தில் இருந்து முழுமையாக விலகவில்லை.
அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால், ரஷியா மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் புதின் பேசினார். போர் நடைபெறும் உக்ரைனுக்கு சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்று ஆதரவு தெரிவித்த நிலையில், ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.