இந்திய படகுகளை தடுக்க கடற்படை திணறுகிறது!!
இலங்கையின் கடற்பகுதிக்குள் நுழையும் இந்திய மீன்பிடிப்படகுகளை தடுக்க முடியாது என்று இலங்கைக் கடற்படை தெரிவிப்பதாகவும் அந்த படகுகளின் வருகையை கட்டுப்படுத்த அனுமதிப்பத்திரம் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி.சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) முன்வைத்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு அண்மையில் வந்த போது கூட நாம் இதனைப்பற்றிப் பேசினோம். அதேபோன்று வெளிவிவகார அமைச்சிலும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அதிகாரிகளை அழைத்தும் கலந்துரையாடினோம்” என்று குறிப்பிட்டார்.
வடக்கிலுள்ள மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே தமது முதலாவது அக்கறை என்றும் எமது மீன் வளங்களை எதுவித ஆபத்துமில்லாது பாதுகாக்க வேண்டும் மற்றும் ஒரு நீண்டகால தெரிவு ஒன்று வரவேண்டும் என்றும் இவற்றை எப்படி செய்யலாம் என்ற பேச்சுக்களே இடம்பறுவதாக கூறினார்.
அந்தவகையில், தமிழக மீனவர்கள், இலங்கை பரப்புக்கு எவ்வளவு தூரம் வரலாம் என்பது குறித்து அனுமதிப்பத்திரம் வழங்குமாறு தெரிவித்துள்ளதுடன், அனுமதிப்பத்திரத்துக்கு பெறும் பணத்தை எமது மீனவர்களுக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.
“எமது மீனவர்களின் தேவைகளுக்குத்தான் முதலிடம் என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதேநேரம் இலங்கை இந்தியாவுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் முடியாது. என்ன நடந்தாலும் கூட 2000, 3000 படகுகள் தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன” என்று சுட்டிக்காட்டினார்.
இதனை தடுக்க முடியாது என்றே கடற்படையும் கூறுகின்றது. அதனால் இரு நாடுகளுக்கிடையில் நல்லதொரு கலந்துரையாடல் இடம்பெற்று ஒப்பந்தமொன்றுக்கு வரமுடியுமானால் அனுமதிப்பத்திரம்’வழங்க முடியுமென்றால் இந்திய கடற்படை மூலம் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த முடியும்” என்றார்.
அதேவேளை, இழுவை மடி வலை மீன்பிடிக்கு ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டோம் என்றும் கலந்துரையாடல்கள் இடம்பெறுமானால் நிச்சயம் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான உங்களையும் அழைப்போம் என்றும் தெரிவித்தார்.