கொரோனா பீதியில் மகனுடன் 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய பெண் மீட்பு!!
மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தியவர் என்று ஒரு பேச்சு சொல் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் கொரோனாவுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியுள்ளார் ஒரு பெண். அதுவும் ஒன்றல்ல… இரண்டல்ல… 3 ஆண்டுகள் தனது பத்து வயது மகனுடன் வீட்டிற்குள் முடங்கியவர், வேலைக்கு செல்லும் கணவரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்திருப்பது அரியானா மாநிலத்தில் தான். அங்குள்ள குருகிராம் மாவட்டத்தில் உள்ள மாருதி கஞ்சி பகுதியில் வசிப்பவர் சுஜன் மஜி, என்ஜினியர். இவரது மனைவி முன்முன். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த 2020-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவிய போது முன்முன் தனது மகனுடன் வீட்டுக்குள் முடங்கினார். அதன் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை.
தனது பத்து வயது மகனையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால் அவரது கணவர் சுஜன் வேலைக்காக வெளியில் சென்றதால், அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை முன்முன். இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜன், தன் வீட்டின் அருகிலேயே வாடகைக்கு வேறு ஒரு வீடு எடுத்து அங்கிருந்தபடி குடும்பத்தை கவனித்துள்ளார் . மனைவி மற்றும் மகனுடன் வீடியோ காலில் மட்டுமே அவர் பேசி வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து, தனது வீட்டின் கதவருகே வைத்து விட்டு சென்று விடுவாராம். அதனை முன்முன் எடுத்து சமைத்து வந்துள்ளார்.
இப்படி 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளார். இப்போது கொரோனா குறைந்து விட்டது என்று கூறிய பிறகும் வீட்டை விட்டு வெளியே வர தொடர்ந்து மறுத்தார். இதனையடுத்து போலீசில் சுஜன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாரும் சுகாதாரத்துறையினரும் நேற்று சுஜன் வீட்டுக்குச் சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த முன்முன் மற்றும் அவரது 10 வயது மகனை வெளியே அழைத்து வந்தனர். பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அரியானா மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.