ஐ.நா சிறப்பு அமர்வில் காஷ்மீர் பற்றி பேசி சீண்டிய பாகிஸ்தான் இந்தியா பதிலடி!!
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை கொடுக்கும் நாடாக பாகிஸ்தான் இருப்பதாக ஐநாவுக்கான நிரந்தர இந்திய ஆலோசகர் பிரதீக் மாத்தூர் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது.
உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அவசர சிறப்பு அமர்வு கடந்த வியாழக்கிழமை(பிப்.23) கூடியது. இந்த சிறப்பு அமர்வில் பேசிய ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம், ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது பற்றி பேசினார். பாகிஸ்தானின் இந்த பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஐநா சிறப்பு அமர்வில் பேசிய இந்திய ஆலோசகர் பிரதீக் மாத்தூர், “பாகிஸ்தான் நாடு பயங்கரவாதிகளுக்கு தண்டனை அளிக்காமல், அவர்களுக்கு பாதுகாப்பான புகலிடத்தை தரும் நாடாக உள்ளது. இதுதான் பாகிஸ்தான் நாட்டின் சாதனைப் பட்டியல். அது இந்தியாவை பற்றி விரும்பத்தகாத, ஆத்திரமூட்டும் பேச்சுகளை பேசுவது கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது” என்று பதிலடி கொடுத்தார்.