;
Athirady Tamil News

இந்தியாவின் முக்கிய தீவுகளின் மீது பறந்த மர்ம பொருள்- பகீர் தகவல்!!

0

வானத்தில் பறக்கும் மர்ம பொருட்கள் உலகம் முழுவதும் பாதுகாப்பு குறித்த விவாதத்தை கிளப்பி உள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்து பலூன் போன்ற மூன்று மர்ம பொருட்களை கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது பெரும் பரபரப்பானது. அது உளவு பலூனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்று வானில் பறக்கும் மர்மப் பொருள் குறித்து பல நாடுகளும் பல தகவல்களைக் கூறி வருகின்றன. அவ்வகையில், அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்டதைப் போன்ற பலூன் போன்ற மர்ம பொருள் இந்தியாவிலும் வானில் பறப்பது காணப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு, அந்தமான் நிகோபார் தீவுகளின் மேற்பகுதியில் பலூன் வகை பொருளை கண்டறிந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அது என்னவென்று அங்கே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அந்தமான் மற்றும் நிக்கோபாரின் சில தீவுகளிலிருந்து இந்த பலூன் தெளிவாகத் தெரிந்துள்ளது. பொதுமக்கள் பலரும் அதை போட்டாவோக எடுத்து தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த பொருளின் நோக்கம் மற்றும் தோற்றம் தெளிவாக தெரியாததால் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் கூறி உள்ளனர். அது சீனாவில் இருந்து வந்ததா, மியான்மரில் இருந்து வந்ததா? என்பது தெரியவில்லை என்றும், மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு அங்கிருந்து நகர்ந்தது என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.

வங்காள விரிகுடாவில் இந்தியாவின் ஏவுகணை சோதனை நடத்தும் பகுதிகளுக்கு அருகே, மலாக்கா ஜலசந்திக்கு அருகில் உள்ள தீவுக்கூட்டத்தில் இந்த பலூன் பறந்துள்ளது. பலூன் கண்டறியப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. எனினும். அமெரிக்கப் பகுதியில் நுழைந்த சீன பலூன் உளவு பார்ப்பதாகக் கூறி அதை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய இந்தச் சூழலில், இந்திய பகுதியில் பறந்த பொருள் குறித்து விசாரணை செய்கின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து எதிர்காலத்தில் விரைவாக பதிலடி கொடுக்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள். பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதி நவீன ஏவுகணையைப் பயன்படுத்தியது. ஆனால், இந்தியா அமெரிக்கா போல இல்லாமல், போர் விமானங்கள் அல்லது விமானங்களில் இணைக்கப்பட்ட கனரக துப்பாக்கிகள் மூலம் இதுபோன்ற சம்பவங்களுக்கு பதிலடி தரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.