குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை: கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி தொடங்க திட்டம் !!
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் 2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் இந்த அறிவிப்பு மிக முக்கியமாகும். ஆனால் தி.மு.க. அரசு சொன்னபடி இந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க் கட்சிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த திட்டத்தை கண்டிப்பாக தி.மு.க. அரசு நிறைவேற்றும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி கூறி வந்தார். இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் அளவில் ஆலோசனையும் நடத்தி இருந்தார்.
இதைத் தொடர்ந்து பொருளாதார ஆலோசனை குழுவுடன் ஆலோசித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டத்தில் யார்-யார் பயன் அடையலாம் என்ற விவரங்களை சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார். இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் வருகிற மார்ச் தாக்கலாகும் பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்பு இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த திட்டத்தில் யார்-யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பயனாளிகளை தேர்வு செய்யும் நிதித்துறை மற்றும் வருவாய்த் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி பி.எச்.எச். என்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக் கும், பி.எச்.எச்.ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோ தயா அன்னயோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் (அதாவது 35 கிலோ அரிசி வாங்குபவர்கள்) நபர்களுக்கு ரூ.1000 கிடைக்கும். இதில் வயது வரம்பு கணவரின் ஆண்டு வருமானம் கணக்கிடவும் வாய்ப்பு உள்ளது.
அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்துக்கு இந்த 1000 ரூபாய் பணம் வழங்கப்படாது. புதுமைப் பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி மாணவிகளில் வறுமைக் கோட்டு கீழ் உள்ள தாயார்கள் இதில் பயன் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதுபோல 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதி யோர் உதவித்தொகை வழங்குவதில் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. குடும்பத் தலைவிகளுக்கு தான் உரிமைத் தொகை என்பதால் ரேசன் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை.
தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் பணம் சென்றடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் இந்த திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கூடி ஒப்புதல் வழங்கியதும், விரிவான அரசாணை வெளியிடப்படும்.