;
Athirady Tamil News

தீர்வு முதல் தேர்தல் தொட்டு பிரபாகரன் வரை: காலத்தை வீணடித்தல்!! (கட்டுரை)

0

இலங்கையில் பொருளாதார பஞ்சம், அரசியல் பஞ்சம், ஜனநாயக பஞ்சம், மனித உரிமைகள் பஞ்சம், இனநல்லிணக்கப் பஞ்சம், நீதி நிலைநாட்டல் பஞ்சம் போன்ற பஞ்ச நிலைமைகள் நிலவிய போதிலும் கூட, நாட்டு மக்களை ஏதேனும் ஒரு விடயத்தின்பால் ‘பராக்குக்காட்டி’, காலத்தை வீணடிக்கின்ற போக்குகளுக்கு, ஒருபோதும் பஞ்சம் இருந்ததில்லை.

பொய்க் கற்பிதங்களும் கதை விடுதல்களும் மக்களை முட்டாளாக்கும் பாங்கிலான நகர்வுகளும், நமது அரசியல், ஆளுகை ஒழுங்கை ஆட்கொண்டுள்ளன.
இவற்றைவிடுத்து, நாட்டை முன்னேற்றுவதற்கானதும், மக்களது பிரச்சினைகளை குறைப்பதற்கானதும், இதயசுத்தியுடனான உருப்படியான வேலைத்திட்டங்கள் இல்லை.

மாறிமாறி அதிகாரத்துக்கு வரும் ஆட்சியாளர்கள், பெருந்தேசியக் கட்சிகள், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகள், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், இலங்கை மீது செல்வாக்குச் செலுத்தும் வேறுபல தரப்புகளுக்கும் இதில் பங்கு இருக்கின்றது.

மிகவுயர்ந்த எழுத்தறிவு மட்டத்தைக் கொண்ட இலங்கை மக்கள் இதனை அறியாதவர்களாக இருக்க முடியாது. ஆயினும், அப்படியான தரப்பினருக்கு பாடம் புகட்ட அவர்கள் முனையாத காரணத்தால், இந்தப் போக்கில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆகவே, இலங்கை மக்களின் பிரச்சினைகள் ‘பிச்சைக்காரனின் புண்’ணைப் போல ஆகியிருக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற, இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சிறியதும் பெரியதுமான நிகழ்வுகளை தொடர்ச்சியாகவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தியும் நோக்குகின்ற போது, அந்த நிகழ்வுகளுக்குள் இருக்கும் சூட்சுமங்களை விளங்கிக் கொள்ள முடியும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பயணத்தில், புதுப்பொலிவுடன் இடம்பெற்ற பேச்சுகள், அதிகாரப் பகிர்வு பற்றிய கருத்துகள், 13ஆவது திருத்த அமலாக்கம், காணி, பொலிஸ் அதிகாரங்கள் பற்றிய அறிக்கைகள், உள்ளூராட்சி சபை தேர்தல் முன்னெடுப்புகள் முதற்கொண்டு, பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்வெட்டு அமலாக்கம் உட்பட, புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளாரா, இல்லையா என்ற வாதப்பிரதிவாதத்தையும் கூட, சூட்சுமங்கள் நிறைந்தவையாகவே நோக்க முடியும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற ஒரு நாட்பட்ட விவகாரத்துக்கு, கடந்த சுதந்திர தினத்துக்குள் தீர்வைத் தருவதாக ஜனாதிபதி ரணில் அறிவித்தார். இரண்டரை மாதங்களுக்குள் இது நடைமுறைச் சாத்தியமானதல்ல என்ற யதார்த்தம், எல்லோருக்கும் தெரியும். என்றாலும், ஓரிரு பேச்சுகள் இடம்பெற்றன. பிறகு ஒரு முட்டுச்சந்தில் அது சென்று நின்றுவிட்டது.

இந்தச் சந்தர்ப்பத்தில், 13ஆவது திருத்த அமலாக்கம் பற்றிய தனது அபிப்பிராயத்தை ஜனாதிபதி முன்வைத்தார். அப்போதெல்லாம் அதற்கு பெரிய எதிர்ப்புகள் கிளம்பவில்லை. மாறாக, ராஜபக்‌ஷ தரப்பும் கொள்கை ரீதியாக பச்சைக் கொடி காட்டியிருந்தது.

ஆனால், ஒரு கட்டத்தில் பௌத்த தேரர்கள் வீதிக்கு இறங்கியதுடன், ஒரு பிரளயமே வெடித்து விடும் நிலை ஏற்பட்டது. அது, “காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என ஜனாதிபதி பகிரங்கமாக அறிவித்த தருணமாகும்.

இலங்கையில், 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட மாகாண சபை முறைமையை சரிவர அமலாக்குகின்ற விடயத்தில், இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்தியாவுக்கு இதில் ஓர் அரசியல் இருக்கின்றது.
அந்தவகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பு வந்து திரும்பிய மறுநாள், அரச தலைவர் மேற்படி அறிவிப்பை விடுத்தார் என்பது கவனிப்புக்கு உரியது.

“13ஆவது திருத்தத்தை அமல்படுத்தப் போகின்றேன். காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கப் போகின்றேன்” என்று அரச தலைவர் அறிவிப்பது, இலங்கை சூழலில் எத்தகைய எதிர்வினையை கொண்டு வரும் என்பது நம்மை விட, ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நன்றாகத் தெரியும். அதையும் மீறி அவர் இவ்வறிவித்தலை செய்தமை, ஒரு வகையான இராஜதந்திரமாகவோ, சூட்சுமமாகவோ இருந்திருக்கின்றது.

ஆனால், சொல்லி வைத்தாற்போல் எல்லாம் நடந்தது. நாட்டில் சிறுபான்மை மக்களுக்குச் சார்பான குறிப்பாக, தமிழ் மக்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியானபோது, என்ன விதமான பிரதிபலிப்பை பெருந்தேசிய சக்திகள் வெளிப்படுத்தினவோ, அவ்வாறான எதிர்ப்பு இந்த விடயத்திலும் வெளிக்காட்டப்பட்டது.

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. “நாங்கள் கொடுக்கத்தான் நினைத்தோம். ஆனால், தமிழ்க் கட்சிகள் பிளவுபட்டுள்ளதுடன், 13இற்கு மறுதரப்பில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளதால் அதனை எம்மால் செய்ய முடியாதுள்ளதே” என்று சொல்வதற்கு அரசாங்கத்துக்கு காரணம் கிடைத்துள்ளது.

இலங்கையில் மின்வெட்டு அரசியலும் இந்த ரகமானதுதான். ஏனெனில் எரிபொருள் பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறி ஆரம்பிக்கப்பட்ட மின்வெட்டு, மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதிய காலத்திலும் அமலில் இருந்தது. எந்தக் கோரிக்கைக்கும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

ஆனால், இப்போது மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தவுடன் எல்லாம் வழமைக்கு திரும்பியுள்ளது. அதாவது, மின்வெட்டு இன்றி, 24 மணிநேரமும் மின்சாரத்தை வழங்கும் இயலுமை, மின்சார சபைக்கு எப்படிக் கிடைத்தது?

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலை நடத்தப் போவதாக அரசாங்கம் அறிவித்தது. தேர்தலுக்கான திகதியும் தபால்மூல வாக்களிப்புக்கான நாளும் குறிக்கப்பட்டன. ஆனால், இப்போது தேர்தல் உரிய திகதியில் நடைபெறுவதற்கான நிகழ்தகவுகள் வெகுவாகக் குறைந்துவிட்டன.

உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விருப்பு, மக்களுக்கு இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கு மக்கள் மனநிலை ரீதியாகத் தயாரில்லை என்பதே உண்மையாகும்.

இதன் அர்த்தம், தேர்தல் இடம்பெறக் கூடாது என்பதல்ல; மாறாக, அதற்கு இன்றைய சூழலும் மக்களின் மனோநிலையும் ஒத்துழைக்க மாட்டாது என்பதாகும்.

ஆனால், இதையெல்லாம் மீறி, அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தப் போவதாக அறிவித்தது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் நிறையவே உள்ளார்ந்த சிக்கல்கள் இருக்கின்ற பின்னணியில், மாகாண சபைத் தேர்தலை கடந்து, உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

வெளிப்படையாக அரசாங்கம் இவ்விதம் செயற்பாட்டாலும், மறைமுகமாகத் உள்ளூராட்சி தேர்தலைத் தாமதப்படுத்துவதற்கான இரகசிய நகர்வுகளைச் செய்து கொண்டே இருக்கின்றது. இதுவிடயத்தில், அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை மக்கள் விளங்கிக்கொண்டுள்ளனர். இதற்கு, தேர்தல் வெற்றி பற்றிய பயமும் காரணமாக இருக்கலாம்.

இந்தச் சம்பவங்களை தொகுத்து நோக்கினால், ஏதாவது ஒரு விடயத்தைச் சொல்லி காலமும் நேரமும் இழுத்தடிக்கப்பட்டு, மக்கள் பேய்க்காட்டப்படுவதை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமன்று!

இனப்பிரச்சினை தீர்வு, குறுகிய காலத்துக்குள் சாத்தியமில்லை என்பதுடன் உடனடியாக காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு சிங்கள தேசியம் விடாது என்பது தெட்டத்தெளிவான ஓர் அடிப்படையாக இருக்க, அவ்விதமான ஒரு கருத்தியல் கட்டமைக்கப்பட்டது. குறிப்பாக, தமிழ் மக்கள் நம்ப வைக்கப்பட்டனர்.

அதுபோல, மின்சார நெருக்கடிக்கு எரிபொருள் பற்றாக்குறை மட்டும்தான் காரணம் என்ற தோரணையில் விடயங்கள் கையாளப்பட்டு, கடைசியாக கட்டணத்தை அதிகரித்து, மக்களுக்கு சுமையை ஏற்றியவுடன், அவர்களின் நெருக்கடி எல்லாம் தீர்ந்து விட்டது எனக் கூறுவது, ‘பேய்க்காட்டல்’ தவிர வேறொன்றில்லை.

இது இவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று, இந்திய அரசியல்வாதியான பழநெடுமாறனும் கவிஞர் காசிஆனந்தனும் கூறிய கருத்துகளையும், இந்த வகைக்குள்ளேயே வகைப்படுத்தி நோக்க வேண்டியுள்ளது.

பிரபாகரன் இறந்து விட்டதாகவும் அதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும், அரசாங்கம் பல தடவை உறுதிபடக் கூறிவிட்டது. ஆயினும், அவரது உயிர்வாழ்வு பற்றிய வாதப்பிரதிவாதங்கள் உலகெங்கும் எழுந்துள்ளன.

அரசாங்கம் சொல்வது போல், பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பே இல்லை என்பது உண்மையாக இருக்குமென்றால், பழநெடுமாறனின் கருத்து உண்மையாக இருக்க முடியாது. இது ஓர் அடிப்படையற்ற, பூச்சாண்டிகாட்டும் கதையென்றால், இதற்குப் பின்னால் பெரிய அரசியலும் நகர்வுகளும் உள்நோக்கங்களும் உள்ளன எனலாம்.

பிரபாகரனின் பெயரைச் சொல்லி அரசியல் ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் கருத்தியல் அடிப்படையிலும் பிழைப்பு நடத்துபவர்களின் கதைவிடலாகவே இதை நோக்க வேண்டியுள்ளது. இதைப் பல தரப்புகளுடன், பல விடயங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

இலங்கையில் தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிளவுபட்டு, தமிழர் அரசியல் பலமிழந்து நிற்கின்ற சூழல், இந்தியாவின் அரசியல் வகிபாகம் – நகர்வுகள் ஆகியவை இவற்றுள் முதன்மையானவை.

அத்துடன், சிலரைப் பயங்காட்ட வேண்டும் என்ற எண்ணம். கருத்தியல் ரீதியாகத் தமிழர்களைக் கட்டமைத்து வைக்க வேண்டிய தேவைப்பாடு; புலிகளின் பெயரைச் சொல்லி நடத்தப்படும் அரசியல், நிதிதிரட்டல், புகலிடக் கோரிக்கை தொடர்பான நலன்கள் எனப் பல விவகாரங்களையும் இதனுடன் தொடர்புபடுத்தலாம்.

அதுமட்டுமன்றி, உள்ளூராட்சி தேர்தல், பெருந்தேசிய அரசியல் ஆகியவற்றிலும் ஏதோவொரு வகையில் செல்வாக்குச் செலுத்தும் ஆயுதமாக இப்பிரசாரம் மாறலாம்.
எது எப்படியிருப்பினும், இதுவும் மேலே குறிப்பிட்டவை போன்று, மக்களை நம்பவைத்து, காலத்தை வீணடிக்கும் இன்னுமொரு ‘கதைவிடல்’ முயற்சி என்றால், இதனால் தமிழ் மக்களுக்குக் கூட, எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.
நடைமுறைச் சாத்தியமற்ற, மக்களை ‘பேய்க்காட்டும்’ கதைவிடல்கள், அறிவிப்புக்களால் காலத்தை வீணடிக்கும் போக்கை சம்பந்தப்பட்டோர் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவரை, இலங்கையரின் தலைவிதி மாறுவதற்கான வாய்ப்பில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.