நான் அதிபரானால் அமெரிக்காவை வெறுக்கும் பாக்., சீனாவுக்கு நிதி உதவி நிறுத்தம்: நிக்கி ஹாலே அறிவிப்பு!!
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நவம்பரில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கு அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தெற்கு கரோலினா ஆளுநராக 2 முறை பதவி வகித்தவருமான நிக்கி ஹாலே போட்டியிடுவதாக அறிவித்தார். இந்நிலையில், நியூயார்க் போஸ்ட் இதழில் எழுதிய அரசியல் கட்டுரையில், தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவை வெறுக்கும் நாடுகளுக்கான நிதி உதவியை நிறுத்துவேன் என்று நிக்கி ஹாலே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்காவின் எதிரிகளை எதிர்க்கவும், நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும் நாடுகளே நிதி உதவி பெறுவதற்கு தகுதியானவை. அமெரிக்காவை வெறுக்கும் பாகிஸ்தான், சீனா, ஈராக் போன்ற நாடுகளுக்கான நிதி உதவி அடியோடு நிறுத்தப்படும். இந்நாடுகளுக்கு கடந்தாண்டு மட்டும் அமெரிக்கா ரூ.38,150 கோடி நிதி உதவி அளித்துள்ளது. வரிசெலுத்துபவர்களுக்கு தங்களது பணம் எங்கு செல்கிறது, எப்படி செலவிடப்படுகிறது என்பது தெரிய வேண்டும்,’’ என்று தெரிவித்தார்.