5-வது திருமண நாளில் வாழ்த்து சொல்ல மறந்த கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய மனைவி!!
எந்த ஒரு செயலையும் புதிதாக செய்யும் போது, ஆர்வமும், மீண்டும் அதனை எப்போது செய்யலாம் என்ற எண்ணமும் இருக்கும். அதுவே பழகி விட்டால் அதன்மீது இருக்கும் ஆர்வமும் குறைந்து விடும். இது நாம் செய்யும் செயல்களுக்கு மட்டுமல்ல. நமது பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களை கூட மறந்து போவதுண்டு. அப்படி தனது திருமண நாளை மறந்து போன மும்பை வாலிபர் ஒருவருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் மும்பை நகர மக்களை பதற வைத்துள்ளது. அந்த வாலிபரின் பெயர் விஷால். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்பனா என்பவருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி திருமணம் நடந்தது.
2019-ம் ஆண்டு விஷால் தனது முதல் திருமண நாளை உற்சாகமாக கொண்டாடினார். ஆனால் அடுத்தடுத்த திருமண நாள்களை அவர் முதல் திருமண நாள் அளவுக்கு கொண்டாடவில்லை. ஆனால் மறக்காமல் மனைவிக்கு வாழ்த்து மட்டும் சொல்லிவிடுவார். இந்த நிலையில் தான் விஷாலின் 5-வது திருமண நாள் கடந்த வாரம் வந்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் மனைவியின் மீதான நாட்டம் குறைந்தது போன்றவற்றால் விஷால், தனது திருமண நாளை மறந்து போனார். அதோடு மனைவிக்கு வாழ்த்தும் சொல்லவில்லை. முதல் நாள் இரவு வரை கணவரிடம் இருந்து வாழ்த்து வரும் என காத்திருந்த மனைவி, மறுநாளும் அவர் வாழ்த்து சொல்லாததால் கடுப்பாகி போனார்.
இதுபற்றி கல்பனா தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் கல்பனாவின் கணவரை திட்டி தீர்த்ததோடு, அலுவலகத்திற்கு சென்ற அவரை உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். அவர் வந்ததும் திருமண நாளில் மனைவிக்கு வாழ்த்து சொல்ல மறந்தது ஏன்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதில் பிரச்சினை முற்றி அவர்கள் விஷாலை சரமாரியாக தாக்க தொடங்கினர். இதை தடுக்க வந்த விஷாலின் தாயாருக்கும் அடி-உதை விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த விஷால் மற்றும் அவரது தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபற்றி மும்பை போலீசார் விஷாலின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். இதுபற்றி அறிந்த மும்பைவாசிகள், திருமண நாளை மறந்து போனது ஒரு தப்பாடா? எங்களை போன்ற பலர் இதை நினைத்து பார்ப்பதே இல்லை என்று கூறினர்.