;
Athirady Tamil News

பயத்தில் ஓடி ஒளியும் ரணில் – ராஜபக்‌ஷர்கள் !! (கட்டுரை)

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துவிட்டது.

தற்போது ஆட்சியிலுள்ள ரணில் -ராஜபக்‌ஷ அரசாங்கம், எந்தவொரு தேர்தலையும் உடனடியாகச் சந்திப்பதற்கு தயாராக இல்லை. அதனால், தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பது அல்லது ஒத்திப்போடுவதற்கான சதித்திட்டங்களை மேற்கொள்வது என்ற எண்ணத்தோடு இயங்கி வருகின்றது. அதன் ஒரு கட்டம்தான், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை, திறைசேரி விடுவிக்காமல் அலைக்கழிப்பதனூடு நிகழ்ந்திருக்கின்றது.

நாட்டில் ஆட்சி மாற்றமொன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுவும், தேர்தல்கள் மூலமாக நிகழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான போராட்டம் மேலெழுந்து, ராஜபக்‌ஷர்கள் ஒட்டுமொத்தமாக அதிகார பதவிகளில் இருந்து விலகிய போதும், தேர்தல்கள் மூலம் ஆட்சித் தலைவரும் அரசாங்கமும் தேர்தெடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், ரணிலும் ராஜபக்‌ஷர்களும் இணைந்து, தேர்தல்களுக்கான வாய்ப்பை தவிர்த்துக் கொண்டு, ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறார்கள். வெளிப்படையான அதிகாரப் பதவிகளில் ராஜபக்‌ஷர்கள் யாரும் இல்லை என்றாலும், இன்றைக்கும் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்திகளாக அவர்களே இருக்கிறார்கள். எதிர்வரும் நாள்களில் மஹிந்த ராஜபக்‌ஷ, மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

திங்கட்கிழமை (20) நள்ளிரவோடு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வந்துவிட்டது. ஆனால், அவரோ, அடுத்த ஆண்டு வரை எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியாது என்று சூசகமாக அறிவித்திருக்கின்றார். 300 மில்லியன் ரூபாய்க்கும் மேலாக செலவளித்து, 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய ரணிலுக்கு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த கிட்டத்தட்ட அதேயளவான நிதியே தேவை என்ற தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கை, காதில் விழவில்லை.

சுதந்திரதினம் என்ற பெயரில் ஒன்றுக்கும் உதவாமல், வெட்டி வீம்புக்காக செலவளிக்கப்பட்ட 300 மில்லியன் ரூபாயை, மக்களின் ஜனநாக உரிமையை நிலைநாட்டுவதற்காகப் பகிர்வதில் உள்ள ரணிலின் மனத்தடை, தோல்வி குறித்த பயம் என்கிற ஒற்றைக் காரணத்தால் எழுந்தது.

தென் இலங்கை அரசியல் தேர்தல் களம் என்பது, ஐக்கிய தேசிய கட்சி எதிர் ஏனைய தரப்புகள் என்ற நிலையிலேயே ஆரம்பம் முதல் இருந்து வந்திருக்கின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தல் வரையில் அதுதான் நிலைமை.

ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கவின் தலைமைப் பதவியை ரணில் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத நிலையில், சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பு, ஐக்கிய மக்கள் சக்தியாக மக்களிடம் வந்தார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வரவோடு, ஐ.தே.க ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கூட, நேரடியாக வெற்றி கொள்ள முடியாத நிலை வந்தது. சுதந்திர இலங்கைக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சி, அதுவும் பல்லாண்டுகள் ஆளும் கட்சியாக இருந்த கட்சி, ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கூட நேரடியாக வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சிக்கு ஒரேயோரு தேசிய பட்டியல் உறுப்பினரே கிடைத்தது. அதன் வழியாக பாராளுமன்றம் வந்த ரணில், இன்றைக்கு ஜனாதிபதியாக இருக்கிறார் என்பதும் வரலாற்றுப் பதிவுதான்.

கடந்த பொதுத் தேர்தலில், ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட நிலை சுதந்திரக் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால், சுதந்திரக் கட்சி சுதாகரித்துக் கொண்டு, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து, சில பாராளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொண்டு, ஓரளவு தப்பித்துக் கொண்டது. இது கடந்த பொதுத் தேர்தல் வரையிலான நிலைவரம்.

இன்றைக்கு ஐ.தே.கவும் பொதுஜன பெரமுனவும் ஓரணியில் நிற்கின்றன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் இரு கட்சிகளும் இணைந்தே போட்டியிடுகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டுக்கு அண்மித்த வெற்றி பெற்ற பொதுஜன பெரமுனவும், மிகமோசமாக தோற்றுப்போன ஐ.தே.கவும் ஓரணியாக நிற்கின்றன.

பெரும் வெற்றி பெற்ற பொதுஜன பெரமுனவை மக்கள், வீதிக்கு இறங்கி விரட்டினார்கள். அவர்களை காப்பாற்ற, தோற்றுப்போய் வீட்டிலிருந்த ரணில், தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வர வேண்டி வந்தது. இன்றைக்கு அவர்கள், தேர்தல் ஒன்றை சந்தித்தால் மிக மோசமான தோல்வியைக் காணும் நிலை காணப்படுகின்றது.

ஏனெனில், தென் இலங்கையின் தேர்தல் களம், ஐக்கிய மக்கள் சக்தி எதிர் தேசிய மக்கள் சக்தி என்றே நிலைபெற்றிருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை தேசிய மக்கள் சக்தியாக உருமாற்றிக் கொண்டது. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதில், தேசிய மக்கள் சக்தியின் பங்கு குறிப்பிட்டளவானது.

ஏனெனில், போராட்டங்களை ஒருங்கிணைக்கும் திறன் என்பது, தேசிய மக்கள் சக்திக்கும் அதன் இணைத் தரப்புகளுக்கும் இருக்கும் அளவுக்கு, எந்தவொரு கட்சிக்கும் இல்லை. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில், அது வெளிப்பட்டது.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை, பல தரப்புக்களும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதில், போராட்டத்தில் பங்களித்த தரப்புகளும் பங்களிக்காத தரப்புகளும் அடங்கும். அப்படியான நிலையில், போராட்டத்தில் கணிசமாக பங்களித்த தேசிய மக்கள் சக்தி, அதன் அறுவடையை தேர்தல்களில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணி மீது, தென் இலங்கைக் கிராமங்களில் கடந்த காலங்களில் அதிருப்தி காணப்பட்டது. குறிப்பாக, அவர்கள், ஆயுத முனையில் நிகழ்த்திய கொலைக் கொடூரங்களால் அது வந்தது. ஆனால், அதனை எப்படியாவது கடந்தாக வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தேசிய மக்கள் சக்தி என்ற நாமத்துக்குள் மக்கள் விடுதலை முன்னணியை அநுர குமார திஸாநாயக்க நுழைத்தார்.

அந்தப் பெயர் மாற்றம், தென் இலங்கையின் தொழிற்சங்கவாதிகள், முற்போக்குவாதிகள், திரைப்பிரபலங்கள், கல்வியாளர்கள் என்று பல தரப்பினரையும் பெருவாரியாக உள்வாங்க வைத்தது. இன்றைக்கு தேசிய மக்கள் சக்தி மேடைகளை அலங்கரிப்பவர்கள், தென் இலங்கையின் முற்போக்காளர்களாக நோக்கப்படுபவர்கள். இது, மக்கள் விடுதலை முன்னணி மீதான கடந்தகாலக் கறையை கடப்பதற்கு குறிப்பிட்டளவு உதவியிருக்கின்றது. அதனால், தென் இலங்கையில் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு என்பது, என்றைக்கும் இல்லாதளவுக்கு உயர்ந்திருக்கின்றது.

அதனால்தான், இனிவரும் தேர்தல்களில் தமக்கும் தேசிய மக்கள் சக்திக்கும்தான் போட்டியே என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவிக்கும் நிலை வந்திருக்கின்றது. தேர்தல்களை ஒத்திப்போடும் சதித்திட்டங்களை ரணில் -ராஜபக்‌ஷ கூட்டு முன்னெடுப்பதற்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் போராடினாலும், தேர்தல் நடந்தால் ரணில் -ராஜபக்‌ஷ தரப்பு தங்களுக்கு போட்டி என்ற நிலையில் இரு கட்சிகளும் இயங்கவில்லை. மாறாக, தென் இலங்கை மக்களின் வாக்குகளை யார் அதிகமாக வாரிக்குவிப்பது என்பதில் தங்களுக்குள் போட்டியிடவே ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் நினைக்கின்றன.

தேர்தல் ஒன்று நடந்தால் அதில் முதல் இரண்டு இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியுமே வரும் சாத்தியமுள்ளதாக அரச புலனாய்வு அமைப்புகள், தென் இலங்கையில் நடத்திய ஆய்வுகளும் கூறியிருக்கின்றன.

இதனால், தேர்தல்களை ஒத்திவைப்பதைத் தவிர ரணில் -ராஜபக்‌ஷர்களுக்கு வேறு வழியில்லை. குறைந்தது ஓராண்டு காலமாவது தேர்தல்களை, நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி ஒத்திவைத்துவிட்டால், அந்தக் காலப்பகுதிக்குள் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் மீதான மக்கள் அபிமானத்தை குறைத்துவிடலாம் என்பது, ரணில் – ராஜபக்‌ஷர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால், ரணில் மீதான அபிமானம் என்பது, மீண்டும் எழுவது என்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. ஏனெனில், ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான மக்களின் போராட்டத்தை, குறுக்கு வழியில் வந்த ரணில், இல்லாமல் ஆக்கிவிட்டார் என்பது, தென் இலங்கையின் உணர்நிலை. அது, குறைந்தது அடுத்த தேர்தல் வரையாவது பிரதிபலிக்கவே செய்யும்.

அத்தோடு, உடனடியாக நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து ரணில் விடுவித்து, மீட்பதற்கான வாய்ப்புகளையும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் காண முடியவில்லை. அதனால், ரணில் – ராஜபக்‌ஷர்கள் தேர்தல்களை ஒத்திவைத்து நாடகம் ஆடலாமே அன்றி, அடுத்து எப்போது தேர்தல் இடம்பெற்றாலும் அது, அவர்களுக்கு தோல்வி என்ற ஒன்றையே பரிசளிக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.