மும்பை அருகே கடலில் அவசரமாக தரையிறக்கப்பட்ட கடற்படை ஹெலிகாப்டர்: 3 பேர் பத்திரமாக மீட்பு!!
இந்திய கடற்படைக்குச் சொந்தமான உள்நாட்டு தயாரிப்பான மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏஎல்ஹெச்) இன்று (புதன்கிழமை) அவசரமாக மும்பை கடற்கரையில் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த மூன்று பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தங்களின் வழக்கமான பயணத்தில் இருந்த ஹெலிகாப்டர் அவசரமாக கடலில் தரையிரக்கப்பட்ட போது, அவை மும்பை கடற்கரைக்கு அருகில் இருந்தன. அதனால் உடனடியாக மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து த்ருவ் ஹெலிகாப்டரில் இருந்த மூன்று பேரும் கடற்படை ரோந்து கப்பல் மூலம் மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேம்படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் ஆன த்ருவ் என்பது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, இரட்டை எஞ்சின் கொண்ட பல்வேறு பயன்படுகளை உடைய புதிய தலைமுறை ஹெலிகாப்டர் ஆகும். இந்த வகை ஹெலிகாப்டர்கள் ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் என்று ராணுவ விமான தகுதிச் சான்று மையத்தால் (Centre for Military Airworthiness Certification) சான்றளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.