என்ஜினில் தீப்பற்றியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!
நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து பைரஹவா நோக்கி ஸ்ரீ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் விமான பணியாளர்கள், பயணிகள் என மொத்தம் 78 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் என்ஜினில் தீப்பற்றியதற்கான அறிகுறி தென்பட்டதையடுத்து இதுபற்றி தரைக்கட்டுப்பாட்டு நிலையத்திற்கு விமானி தகவல் தெரிவித்தார். உடனடியாக விமானம் காத்மாண்டு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. காத்மாண்டு விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஆனால் தரையிறங்கியபோது தீப்பிடித்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. நேபாளத்தில் ஜனவரி மாதம் நிகழ்ந்த பயங்கர விமான விபத்துக்குப் பிறகு விமானப் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர். அந்த விமானத்தில் பயணித்த 72 பேரில் 71 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. ஒருவரை காணவில்லை. அவரும் உயிரிழந்துவிட்டதாக கருதப்படுகிறது.