பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்க நிதி உதவி இருமடங்கு அதிகரிப்பு: அதிபர் பைடன் முன்மொழிவு!!
பாகிஸ்தானில் ஏற்கனவே பொருளாதார மந்தநிலை நிலவி வந்தநிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு அந்நாட்டையே புரட்டிப்போட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக உலக நாடுகளிடம் கடன் உதவியை பாகிஸ்தான் கோரியுள்ளது.
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கான பொருளாதார நிதியை இருமடங்காக உயர்த்தி வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் முன்மொழிந்துள்ளார்.
பொருளாதார ஆதரவு நிதியுதவி பிரிவின் கீழ் கடந்த 2022ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.316கோடி (39மில்லியன் டாலர்) நிதியுதவியை வழங்கியது. இந்நிலையில் வருகிற அக்டோபரில் தொடங்கும் 2024ம் நிதியாண்டில் இந்த நிதியுதவியை ரூ.672.67 கோடி(82மில்லியன் டாலர்) அதிகரித்து வழங்குவதற்கு பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அமெரிக்காவால் வழங்கப்படும் இந்த நிதியுதவியானது பாகிஸ்தானில் தனியார் துறை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* ரூ.565 லட்சம் கோடிக்கு பட்ஜெட்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரூ.565லட்சம் கோடிக்கான பட்ஜெட்டை நேற்று முன்தினம் அறிவித்தார். இதனை தொடர்ந்து பிலடெல்பியாவில் நடந்த பேரணியில் பங்கேற்ற பைடன், ‘‘பட்ஜெட்டானது பணக்காரர்களுக்குஅதிக வரி, சமூக நலத்திட்டங்களுக்கு நிதி மற்றும் முக்கிய உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முதலீடு ஆகியவற்றை முன்மொழிகிறது. அமெரிக்கர்களின் சுமையை குறைப்பதற்கு என்ன செய்ய முடியும் என்பதை பட்ஜெட் பிரதிபலிக்கிறது” என்றார்.
* இந்தியா -அமெரிக்க உறவு ஆழமானது
வாஷிங்டன்னில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ‘‘இந்தியா,அமெரிக்கா உலகளாவிய கூட்டாளிகள். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் குறிப்பாக மக்களிடையேயான உறவுகள் என அனைத்திலும் நாங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளானது இருநாடுகளுக்கும் இடையிலான விரிவான உறவை மேலும் ஆழப்படுத்துகிறது” என்றார்.