பயங்கரவாதம் முற்றிலும் அகற்றப்படும்: காஷ்மீரில் வன்முறைகள் குறைந்துள்ளது- அமித்ஷா பேச்சு!!
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 54-வது எழுச்சி நாள் ஐதராபாத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டு பெற்றுக் கொண்டார். விழாவில் அமித்ஷா பேசியதாவது: நாட்டின் எந்த பகுதியிலும் பிரிவினைவாதம், பயங்கரவாதம் மற்றும் தேசிய விரோத நடவடிக்கைகள் ஆகியவை உறுதியாக கையாளப்படும். கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்பு சவால்களை பா.ஜனதா அரசு வெற்றி கரமாக சமாளித்துள்ளது. காஷ்மீரில் வன்முறைகள் கணிசமாக குறைந்து வருகிறது.
அதேபோல் வடகிழக்கு மற்றும் இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களிலும் கிளர்ச்சி குறைந்து மக்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பலர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்துள்ளனர். பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ளாத பிரதமர் மோடி அரசின் கொள்கை வரும் காலங்களிலும் தொடரும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.