அதானி விவகாரம்: என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து பாராளுமன்றத்தில் 16 கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு!!
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. இதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை கண்டித்து பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, கேரள காங்கிரஸ், தேசிய மாநாடு, சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), ம.தி.மு.க., ராஷ்டீரிய ஜனதா தளம் உள்ளிட்ட 16 கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் அதானி விவகாரம், மத்திய அரசு என்.ஐ.ஏ. உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பும் போது 16 கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பில் இதே பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டம் நடப்பதற்கு முன்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் சோனியா காந்தி மற்றும் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோரை சந்தித்து இது தொடர்பாக விவாதித்தனர்.