பெருமாள் முருகன் எழுதிய ‘பைர்’ நாவல் -புக்கர் பரிசு போட்டிக்கு தேர்வு!!
இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ பதிப்பிக்கப்பட்ட நாவலுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. இது 50 ஆயிரம் பவுண்ட்ஸ் (ரூ.50 லட்சம்) பரிசுத்தொகை கொண்ட விருது. எழுத்தாளருக்கும், மொழி பெயர்த்தவருக்கும் இத்தொகை பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான போட்டிக்கு தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘பைர்’ நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவல், 2016-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அனிருத்தன் வாசுதேவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். வெவ்வேறு சாதியை சேர்ந்த காதல் ஜோடி வீட்டை விட்டு ஓடிச்செல்வது பற்றியும், ஆணவ கொலை பற்றியும் இதன் கதை அமைந்துள்ளது. வேறு 12 எழுத்தாளர்களின் நாவல்களுடன் ‘பைர்’ நாவல் போட்டியிடுகிறது. தனது நாவல் தேர்வு செய்யப்பட்டதற்கு பெருமாள் முருகன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது, தனது மிக முக்கியமான புத்தகம் என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு கீதாஞ்சலி ஸ்ரீ என்ற இந்திய எழுத்தாளர் புக்கர் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.