;
Athirady Tamil News

பலத்த மழையால் ஆந்திராவில் 2 லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் சேதம்!!

0

மேற்பரப்பு சுழற்சியின் தாக்கத்தால் ஆந்திராவில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. உத்தராந்திரா முதல் ராயலசீமா வரை இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழையின் காரணமாக விவசாய பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் மழைநீர் தேங்கி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் சுமார் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம், மிளகாய், உளுந்து, தினை பயிர்கள், வாழை, பப்பாளி, மா உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. பலத்த காற்று காரணமாக சாலையோரம் இருந்த பெரிய மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதம் அடைந்து மின் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏலூர் மாவட்டம் ஜங்காரெட்டிகுடம் பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 38) என்ற பெண் தனது வீட்டின் அருகே சிறிய கொட்டகை அமைத்து கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் பலத்த காற்று வீசியதால் அருகில் இருந்த மரம் ஒன்று கடை மீது விழுந்தது. கடையில் இருந்த சந்தியா மீது மரம் விழுந்ததால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அனந்தபுரத்தில் மின்னல் தாக்கி ஸ்ரீவித்யா (38) என்ற பெண் உயிரிழந்தார். அல்லூர் மண்டலம் மணல்மேட்டில் இடி தாக்கி 4 கால்நடைகள் இறந்தன.

ஸ்ரீகாகுளம் மற்றும் நெல்லூர் மாவட்ட விவசாயிகள் தங்களிடம் உள்ள தானியங்களை அரசு கொள்முதல் செய்து கொள்ளும் என்ற நம்பிக்கையில் அதிக அளவில் இருப்பு வைத்தனர். தற்போது பெய்து வரும் மழையால் தானியங்கள் நனைந்து நிறம் மாறிவிடும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பல்நாடு பிரகாசம், என்டிஆர், கர்னூல், அனந்தபூர், அல்லூரி சீதாராமராஜ், ஒய்எஸ்ஆர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பல 100 ஏக்கரில் மிளகாய் அறுவடை செய்து இருப்பு வைத்திருந்தனர். மிளகாய்கள் மழையில் நனைந்து கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மழையில் சேதம் அடைந்த விவசாய பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தராந்திரா, மத்திய ஆந்திரா மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், மீதமுள்ள மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.