பாலியல் வன்கொடுமை குறித்த கருத்து- விளக்கம் அளிக்க கால அவகாசம் கேட்ட ராகுல் காந்தி!!
இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது ராகுல்காந்தி பேசிய கருத்துக்கு டெல்லி போலீசார் தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை கடந்த செப் டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி ஜனவரி 30-ந் தேதி காஷ்மீரில் நிறைவு செய்தார். காஷ்மீரில் அவர் பேசும்போது ‘இன்னும் கூட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுகிறார்கள். நான் ஒரு பெண்ணிடம் கேட்டேன் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி கூறினார். போலீசில் புகார் அளிக்கலாமே என கேட்டேன். அப்போது காவல் துறையை அழைக்க நான் வெட்கப்படுகிறேன்’ என தெரிவித்துள்ளதாக ராகுல்காந்தி பேசினார். இதுதொடர்பான வீடியோ வெளியானது. பாலியல் வன்கொடுமை குறித்த கருத்து தொடர்பாக ராகுல்காந்திக்கு டெல்லி போலீசார் நேற்று நோட்டீஸ் வழங்கினார்கள். 3 மணிநேரம் காத்திருந்து அவரிடம் இந்த நோட்டீசை கொடுத்தார்கள். பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக உங்களை அணுகிய பெண்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதன் காரணமாக அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இந்த நோட்டீஸ் தொடர்பாக டெல்லி போலீசார் இன்று ராகுல்காந்தி வீட்டுக்குச் சென்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பு போலீஸ் கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா தலைமையில் ஒரு குழு அவரது வீட்டுக்குச் சென்றது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக தங்களை அணுகிய பெண்கள் குறித்த விவரங்களை தெரிவிக்குமாறு ராகுல்காந்தியிடம் போலீசார் கேட்டனர். ராகுல்காந்தி வீட்டுக்கு போலீசார் சென்றதை அறிந்ததும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு கூடினார்கள். அவர்கள் போலீஸ் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். போராட்டம் செய்த காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும் என ராகுல் காந்தி கூறியதை அடுத்து, போலீசார் அவருக்கு அவகாசம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து சிறப்பு சிபி ஹூடா கூறியதாவது:- நாங்கள் ராகுல் காந்தியை சந்தித்தோம். அவருக்கு சிறிது அவகாசம் தேவை என்றும், நாங்கள் கேட்ட தகவல்களைத் தருவதாகவும் அவர் கூறினார். நாங்கள் அளித்த நோட்டீசை அவரது அலுவலகம் ஏற்றுக் கொண்டது. விளக்கம் அளித்த பிறகு தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும். இது ஒரு நீண்ட யாத்திரை என்றும் அவர் பலரைச் சந்தித்ததாகவும், அதைத் தொகுக்க நேரம் தேவை என்றும் ராகுல் காந்தி கூறினார். விரைவில் தகவலைத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். தகவல் கிடைத்தவுடன் எங்கள் நடவடிக்கைகளைத் தொடங்குவோம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க, ராகுல் காந்தியின் தரப்பை நாம் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.