இன்றுடன் தீருமா இலங்கையின் நெருக்கடி?
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் கடன் தொகைக்கான அங்கீகாரம் இன்று வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பிலான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டு உத்தியோகபூர்வ அறிவிப்பு இலங்கை நேரப்படி நாளை அறிவிக்கப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் 4 வருடங்களில் 2.9 பில்லியன் டொலர்கள் கடனை இலங்கை பெற உள்ளது.
அதன் முதல் தவணையாக 390 மில்லியன் டொலர்கள் இம்மாத இறுதியில் கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த அங்கீகாரம் கிடைக்குமாக இருந்தால், இலங்கைக்கு வெவ்வேறு அமைப்புகளில் இருந்து கடன்கள் மட்டுமின்றி, பல்வேறு வெளிநாட்டு நேரடி முதலீடுகளும் கிடைக்கப்பெறும் என நம்பப்படுகிறது.