;
Athirady Tamil News

பாராளுமன்ற முடக்கம் தீர ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் – மந்திரி ஹர்தீப்சிங் பூரி !!

0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்தில் பேசுகையில், இந்திய ஜனநாயகம் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இதில் தலையிட வேண்டும் என்றும் கூறினார். இந்தியாவை இழிவுபடுத்தியதற்காக, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பா.ஜ.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது. அதானி பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டு வருவதால் பாராளுமன்றம் முடங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது இந்திய குடிமகன் யாராவது வெளிநாட்டுக்குச் சென்றால், அங்கு பேச அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அந்தப் பேச்சு சுதந்திரத்துடன், பொறுப்புணர்வும் இருப்பது அவசியம். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, மிகவும் பழமையான நாடு. அதில் சந்தேகம் இல்லை. ராகுல் காந்தி வெளிநாட்டுக்குச் சென்றால், இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பேசுகிறார். அவர் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவர் இந்தியாவில் இருப்பதைத்தான் கூறுவதாக சொல்வதை ஏற்கமுடியாது.

அவர் ஏதேனும் செயல்திட்டத்துக்கு உடந்தையாக இருக்கிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இந்தப் பிரச்சினை முடிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், ராகுல் காந்தி சந்தேகத்துக்கு இடமின்றி மன்னிப்பு கேட்டால்தான் பிரச்சினை முடிவுக்கு வரும். ராகுல் காந்தி, தெளிவாக மன்னிப்பு கேட்க வேண்டும். தவறு செய்துவிட்டேன். அதனால் மன்னிப்பு கேட்கிறேன் என அவர் கூறவேண்டும். அப்படி செய்தால் பாராளுமன்றம் செயல்பட வழி பிறக்கும் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.