இறக்குமதித் தடைகளை முற்றாக நீக்க முடியாது – அமைச்சரவை பேச்சாளர் பந்துல !!
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டவுனேயே இறக்குமதித்தடைகளை முற்றாக நீக்க முடியாது. அந்தளவிற்கு அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கவில்லை.
தேவைக்கேற்ப படிப்படியாக இறக்குமதி தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டவுனேயே இறக்குமதித்தடைகளை நீக்க முடியாது. தடம் புரண்டுள்ள பொருளாதாரத்தை சற்று நகரத்தியுள்ளோம்.
அதற்கமைய இனிவரும் பயணங்களை மிகவும் அவதானத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். எனவே ஒரே சந்தர்ப்பத்தில் சகல இறக்குமதித் தடைகளையும் நீக்க முடியாது.
இன்னும் எமது அந்நிய செலாவணி கையிருப்பு போதுமானளவு அதிகரிக்கவில்லை. எனவே அந்நிய செலாவணி கையிருப்பு முகாமைத்துவம் உள்ளிட்டவை மத்திய வங்கியினால் படிப்படியாக முன்னெடுக்கப்படும். அதற்கமையவே இறக்குமதி கட்டுப்பாடுகள் , தளர்வுகள் குறித்த தீர்மானங்களும் எடுக்கப்படும்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள துறைகளைக் கண்டறிந்து , அவற்றுக்கான இறக்குமதி தடைகளை நீக்குவதற்கு முன்னுரிமையளிக்குமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அதன் பின்னர் ஒவ்வொரு காரணிகள் தொடர்பிலும் ஆராய்ந்து , தேவைக்கேற்ப படிப்படியாகவே இறக்குமதி தடைகள் நீக்கப்படும் என்றார்.