;
Athirady Tamil News

ராகுல்காந்தி, அதானி விவகாரம்: 7-வது நாளாக இரு அவைகளும் ஒத்திவைப்பு!!

0

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. அதானி குழும முறைகேடு குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜகவும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனால் கடந்த வாரம் முழுவதும் மக்களவை, மேல்சபை ஆகிய இரு அவைகளும் முடங்கின. அதானி குழும விவகாரம் மற்றும் ராகுல் காந்தி பிரச்சினையால் பாராளுமன்றத்தில் நேற்றும் 6வது நாளாக அமளி ஏற்பட்டது. இரு அவைகளும் முடங்கியது. பாராளுமன்றம் இன்றும் 7வது நாளாக எதிர்க்கட்சி, ஆளும் கட்சி உறுப்பினர்களால் முடங்கியது.

பாராளுமன்றம் மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்க முயன்றார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். “எங்களுக்கு கூட்டு குழு விசாரணை தேவை” என்று கூறி அவர்கள் முழக்கமிட்டனர். அவர்களை ஓம் பிர்லா அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் கூறும்போது, “பட்ஜெட் தொடர் முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும். இதனால் அமைதியாக இருங்கள்” என்றார்.

ஆனால் அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவையை 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மேல்சபையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அவர்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து ராகுல்காந்தி மன்னிப்பு கேட்ககோரி முழக்கமிட்டார்கள். அதே நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி விவகாரத்தை எழுப்பினார்கள்.

இதனால் ஏற்பட்ட அமளியில் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. அதானி, ராகுல்காந்தி பிரச்சினையால் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் 7வது நாளாக முடங்கியது. பாராளுமன்ற முதல் மாடியில் ஏறி நின்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.