ரஷ்யாவில் புதின், ஜின்பிங் சந்திப்பு – மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டு சேர விருப்பம்!!
ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், அதிபர் புதினை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கூட்டு சேர அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. இதனால் ரஷ்யா – சீனா வர்த்தக உறவுகள் அதிகரிக்கத் தொடங்கின. இது இரு நாடுகள் இடையே நெருக்கத்தை அதிகரித்துள்ளது.
இந்திய பயணத்தை முடித்துக்கொண்ட ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் பயணமாக நேற்று ரஷ்யா சென்றார். அதுவும், உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றிய பின் அங்கு ரஷ்ய அதிபர் புதின் முதல்முறையாக சென்று வந்த மறுநாளே, அவரை மாஸ்கோவில் அதிபர் ஜின்பிங் சந்தித்து நான்கரை மணி நேரம்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புதினுக்கு எதிராக சர்வதேச வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சீன அதிபரின் பயணம், புதினுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. மிகவும் அரிதாக, பேச்சுவார்த்தைக்குப்பின் ஜின் பிங்கை, புதின் தனது காரில் அழைத்துச் சென்றார். இருவரும் சிரித்தபடி காணப்பட்டனர்.
இந்த சந்திப்பின்போது, உக்ரைன் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக புதின் தெரிவித்தார். இதற்காக சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
ரஷ்ய அதிபரை சந்தித்த பின் பேட்டியளித்த அதிபர் ஜின்பிங், ‘‘சீன-ரஷ்யா இடையேயான பாதுகாப்பு உறவுக்கு சீன தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும். சீனாவும், ரஷ்யாவும் பெரிய சக்திவாய்ந்த அண்டை நாடுகள்’’ என்றார்.
ரஷ்யாவுக்கு ஐரோப்பிய சந்தைகள் மூடப்பட்டுள்ளதால், சீனாவுக்கு எரிசக்தி ஏற்றுமதியை ரஷ்யா அதிகரித்துள்ளது. இரு நாடுகள் இடையே பொருளாதார உறவுகளை மேலும் ஊக்குவிப்பது தொடர்பாகவும் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.