;
Athirady Tamil News

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா திடீர் உக்ரைன் பயணம்… சீனா கடும் அதிருப்தி!!

0

போர் நடைபெற்று வரும் உக்ரைனுக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்க தலைவர்கள் திடீர் பயணம் மேற்கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வரிசையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று திடீரென உக்ரைனுக்கு சென்றார். இந்தியாவில் இருந்து விமானம் மூலம் போலந்து சென்ற ஜப்பான் பிரதமர், அங்கிருந்து உக்ரைன் சென்றுள்ளார். அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச உள்ளார். போர் தீவிரமடைந்துள்ள இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தும் விதமாக ஜப்பான் பிரதமரின் பயணம் அமைந்துள்ளது.

ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பான் ஏற்றுள்ள நிலையில், ஜப்பான் பிரதமரின் உக்ரைன் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆயுத பலத்தால் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றும் நடவடிக்கையை ஜப்பான் பிரதமர் உறுதியாக நிராகரிப்பார். சட்டத்தின் அடிப்படையில் சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்தவேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவார். ஜப்பானின் பிரதம மந்திரியாகவும், ஜி7 நாடுகளின் தற்போதைய தலைவராகவும் உக்ரைனுக்கான ஆதரவை கிஷிடா நேரடியாக தெரிவிப்பார் என்று ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது.

மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசிய நிலையில், ஜப்பான் பிரதமரின் உக்ரைன் பயணம் அமைந்துள்ளது. இதனால் சீனா கடும் அதிருப்தியில் உள்ளது. நிலைமையை மோசமாக்குவதற்கு பதிலாக, பதற்றத்தை தணிக்க ஜப்பான் இன்னும் நிறைய செய்யும் என எதிர்பார்ப்பதாக சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பி பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதே சீனாவின் நிலைப்பாடு எனவும், அரசியல் தீர்வு காண்பதற்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்க உலகத்துடன் இணைந்து சீனா பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசுவாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த வென்பின், தங்கள் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகவும், அனைத்து தரப்பினருடனும் தொடர்பு கொள்வதாகவும் கூறினார். போரை நிறுத்த அமெரிக்காவுடன் இணைந்து சீனா செயல்படுமா? என்ற கேள்விக்கு சற்று காட்டமாக பதிலளித்தார். அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும் போரை நிறுத்தவும் விரும்புகிறதா? என்று அமெரிக்காவிடம் முதலில் கேட்க வேண்டும் என்றார் வென்பின்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.