டெல்லி போலீசிடம் இருந்து ராகுல்காந்தி பயந்து ஓடுவது ஏன்?: அனுராக் தாக்கூர் கேள்வி !!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது பாதயாத்திரையில் பேசியபோது, பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றம் சாட்டி இருந்தார். அதன் அடிப்படையில், அந்த பெண்களை பற்றிய விவரங்களை அளிக்குமாறு ராகுல்காந்திக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, அவரது வீட்டுக்கு நேரில் சென்றனர். சில மணி நேரங்களுக்கு பிறகு, ராகுல்காந்தி, காரில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்தநிலையில், இதை சுட்டிக்காட்டி, மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:- ஒரு எம்.பி. என்ற முறையில், பாலியல் வன்முறை பற்றிய தகவல்களை போலீசுக்கு சொல்வது ராகுல்காந்தியின் பொறுப்பு. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் கற்பழிப்பு சம்பவம் நடந்தபோது, கார் அணிவகுப்புடன் அங்கு சென்ற ராகுல்காந்தி, இப்போது டெல்லி போலீசிடம் இருந்து பயந்து ஓடுவது ஏன்? என்ன நிர்ப்பந்தம்? பெண்களுக்கு நீதி கிடைப்பதை அவர் விரும்பவில்லையா? பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியமானது என்பதால், பாராளுமன்றம் இயங்குவதை நாங்கள் விரும்புகிறோம். ராகுல்காந்தி மன்னிப்பு கேட்டால், பாராளுமன்றம் இயங்கும். இந்தியாவில் இருந்து ஜனநாயகம் துடைத்து எறியப்பட்டதாக லண்டனில் ராகுல்காந்தி பேசினார். ஆனால், உண்மையில், இந்திய ஜனநாயகத்தில் இருந்து காங்கிரஸ்தான் துடைத்து எறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.