மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து வரும் 29-ம் தேதி போராட்டம் – மம்தா பானர்ஜி!!
ரூ.13,500 கோடி பணமோசடி வழக்கில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்ட மெகுல் சோக்சிக்கு எதிரான ரெட் கார்னர் நோட்டீஸ் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பிறப்பித்த ரெட் கார்னர் நோட்டீஸ் உத்தரவை இண்டர்போல் நீக்கியுள்ளது. எனினும், இந்தியாவில் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை இந்த நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது. பஞ்சாப் தேசிய வங்கி பணமோசடி வழக்கில் எந்த பாதிப்பும் இதனால் ஏற்படாது.
அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறும் என கூறப்படுகிறது. ரெட்-கார்னர் நோட்டீசானது, சோக்சி வேறு நாட்டுக்கு பயணம் மேற்கொண்டால், அவரை கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாக இருந்தது. இனி அந்த ஆபத்து அவருக்கு இருக்காது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 100 நாட்கள் வேலைக்கான உரிய தொகையை தராமல் மத்திய அரசு நிறுத்திவிட்டது.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கூட எங்களுடைய மாநிலத்திற்கு என்று எதுவும் அளிக்கப்படவில்லை. அதனால் மேற்கு வங்காள மக்களுக்கு எதிரான மத்திய அரசின் சர்வாதிகார போக்கைக் கண்டித்து வரும் 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் அம்பேத்கர் சிலை முன் போராட்டம் நடத்தப்படும். ஒரு சில நபர்களே இந்த நாட்டை நடத்திச் செல்கின்றனர். அதானி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோர் அவர்களது சிறந்த நண்பர்களாக உள்ளனர். அந்த மக்களுக்காக மட்டுமே பா.ஜ.க. வேலை செய்து வருகிறது என தெரிவித்தார்.