தாயைக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் அடைப்பு- மகன், மருமகள் கைது!!
ஆந்திர மாநிலம் அமடபாகுலா பகுதியை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 64). இவரது மகன் ராமுலு, மருமகள் சிவமணி. ராமுலு அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சங்கரம்மா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்தார். ராமுலு தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் தனது மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தாயை கழுத்தை நெருங்கி 2 பேரும் கொலை செய்தனர். பின்னர் தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர். சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர்.
அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வனபர்த்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் நாகசேகர் மற்றும் போலீசார் ராமுழு அவரது மனைவி சிவமணி ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாய் நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்ததால் அவரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனபர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகன், மருமகளை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.