அம்ரித்பால்சிங்கின் மாறுவேட புகைப்படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை- நேபாள எல்லையில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!!
பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் செயல்படும் ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த அமைப்பின் ஆதரவாளரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்த நிலையில் அம்ரித்பால்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் அவரை கைது செய்வதற்காக போலீசார் வாகனங்களில் துரத்தி சென்றனர். அப்போது அவர் உடைகள் மற்றும் வாகனங்களை மாற்றி மோட்டார் சைக்கிளில் ஏறி சினிமா பாணியில் தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் கடைசியாக ஜலந்தரில் உள்ள ஒரு குருத்வாராவுக்கு சென்று சீக்கிய தலைவர் ஒருவரின் செல்போனில் பேசியதும், பின்னர் அங்கு ஆடைகளை மாற்றியதோடு உணவு சாப்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர் ஒரு சுங்கச்சாவடி வழியாக தப்பி சென்ற வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அம்ரித்பால்சிங்கின் நெருங்கிய கூட்டாளிகள், ஆதரவாளர்கள் என இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய அம்ரித்பால்சிங்கை கடந்த 4 நாட்களாக போலீசார் தீவிரமாக தேடியும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அம்ரித்பால்சிங் மாறு வேடங்களில் சுற்றலாம் என போலீசார் கருதுகின்றனர். இதைத்தொடர்ந்து அவரின் பல்வேறு தோற்றங்கள் குறித்து புகைப்படங்கள் வரைந்து போலீசார் அவற்றை வெளியிட்டுள்ளனர்.
தேடுதல் வேட்டை 5-வது நாளாக நீடிக்கும் நிலையில் பஞ்சாப் மட்டுமல்லாது உத்தரகாண்ட், அசாம் மாநிலங்களுக்கு அவர் தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதைத்தொடர்ந்து அங்கும் தேடுதல் வேட்டை மற்றும் கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக உத்தரகாண்டில் உள்ள குருத்வார்க்கள், ஓட்டல்கள் மற்றும் இந்திய நேபாள எல்லையில் உள்ள உதம்சிங் நகர் மாவட்டத்திலும் தீவிர சோதனை நடந்து வருகிறது.