“எமது நாட்டின் முழுப் பெறுமதி 8,000 கோடி டொலர்கள்” – பொன்சேகா!!
எமது நாட்டின் முழுப் பெறுமதி 8,000 கோடி டொலர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று (23) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்;
“.. நாட்டின் தற்போதைய நிலைமை நமக்கு நல்லாகவே தெரியும், உண்ண உணவு இல்லை மக்கள் கஷ்டத்தில், மருந்துகள் இல்லாத, மின்கட்டண அதிகரிப்பு என நாடு தள்ளப்பட்டுள்ளது. இப்படி ஒருபோதும் நாடு வீழ்ந்ததில்லை.
அப்படியிருக்க சில மூளை இல்லாத ஜென்மங்கள் பாற்சோறு சமைத்து வெடி வெடிக்க வைத்து சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்புதலை வரவேற்றனர். அவர்களுக்கு புத்தியை, ஞானத்தினை கடவுள்தான் கொடுக்க வேண்டும்.
ஜனாதிபதி கூறுகிறார் எதிர்வரும் 2025ம் ஆண்டு வரும் போது, எமது நாடு ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகளின் நிலைக்கு வருகிறதாம். வாயை திறந்தாலே சும்மா கடி நகைச்சுவைகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.
எமது நாட்டின் முழுப் பெறுமதி 8,000 கோடி டொலர்கள். அப்படியிருக்க உலகில் சில மனிதர்கள் இருக்கிறார்கள் எலான் மாஸ்க் 18,700 கோடி டொலர்கள், எங்கள் பெறுமதி வெறும் 8,000. அடுத்து நாம் அனைவரும் அறிந்த பில்கேட்ஸ் அவரது பெறுமதி 1,700 கோடி டொலர்கள். என்னதான் நடக்குது? உடனடியாக தேர்தலை நடத்துமாறு நாம் ஜனாதிபதியிடம் கோருகிறோம்.
எமக்குத் தெரியும் லெபனான் மூன்று வருடங்களாக ஐஎம்எப் சென்றார்கள், என்ன நடந்தது பாதாளத்திற்கே சென்று விட்டனர். ஐஎம்எப் எனும் கோலத்தினை கழுத்தில் மாட்டிக் கொண்டார் என்பதற்காக நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீளாது.
ஜனாதிபதிக்கு இந்த நாட்டினை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்றால், ஊழலை ஒழியுங்கள், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார். அரசியலில் உள்ள ஊழலை ஒழியுங்கள். அதை விட்டு கடன் எடுத்து சாப்பிட்டு அடுத்த வேலயை பார்க்கும் நிலையில் தான் ஜனாதிபதி இருக்கிறார்.
சிலர் கூறுகிறார்கள், இப்போது நீண்ட வரிசைகள் இல்லையாம், ஏன் இல்லை? வரிசையில் நிற்க பணமில்லை. வரிசை இல்லை என்று நாடு முன்னேறுமா? இப்படியான கதைகளால் எங்கள் மயிர்கள் மேலெழுகின்றன.. “ எனத் தெரிவித்திருந்தார்.