அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் அறிக்கை!!
அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் ஜேக் டோர்சேவின் பிளாக் நிறுவனம் பற்றி புது ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜேக் டோர்சே பிளாக் என்னும் டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். பணம் செலுத்துவதற்கு பிளாக் தளத்தை பயன்படுத்தியர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி காட்டியதாக ஜேக் மீது ஹின்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் போலி கணக்குகள் தொடங்க வாடிக்கையாளர்களை பிளாக் நிறுவனம் அனுமதித்ததாகவும் ஹின்டன்பர்க் நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அரசின் விதிகளை பின்பற்றாமல் பிளாக் ஏய்த்ததாகவும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றியதாகவும் ஹின்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிளாக் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு பதில் சிறிய பதிவு நிறுவனங்கள் வழியாக பரிவர்த்தனை நடத்தியதாகவும், ஜேக் டோர்சே தனிப்பட்ட முறையில் 500 கோடி டாலர் (ரூ.41,100 கோடி) வருமானத்தை அபகரித்து கொண்டதாகவும் ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
ஹின்டன்பர்க் நிறுவனம் அறிக்கையை தொடர்ந்து ஜேக் டோரசேவின் பிளாக் நிறுவனப் பங்குகள் விலை 21% சரிந்துள்ளது.