;
Athirady Tamil News

போதைப்பொருளை தடுக்க சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்: அமித்ஷா!!

0

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பெங்களூருவில் ‘போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு’ தொடர்பான தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 தென் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் அமித்ஷா பேசும்போது கூறியதாவது:- பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க போதைப்பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.

சுதந்திர தின பவள விழாவையொட்டி 75 நாள் பிரசாரத்தின்போது, 75 ஆயிரம் கிலோ போதைப்பொருளை அழிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு, ரூ.8,409 கோடி மதிப்பிலான 5 லட்சத்து 94 ஆயிரத்து 620 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டு, இலக்கைவிட பன்மடங்கை எட்டி விட்டோம். இதுவரை அழிக்கப்பட்ட மொத்த போதைப்பொருட்களில், போதைப்பொருள் தடுப்பு படை (என்.சி.பி.) மட்டும் ரூ.3 ஆயிரத்து 138 கோடி மதிப்புள்ள ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 363 கிலோ போதைப்பொருளை அழித்துள்ளது.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சகம் மும்முனை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இந்த மும்முனை அணுகுமுறையில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து நிறுவனங்களுக்கும் அதிகாரமளித்தல் மற்றும் அவர்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்குதல் ஆகியவை அடங்கும். போதைப்பொருள் கடத்தல் என்பது ஒரு மாநிலம் அல்லது மத்திய அரசுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. இது ஒரு தேசிய பிரச்சினை. அதை சமாளிப்பதற்கான முயற்சிகள் தேசிய மற்றும் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்.

போதைக்கு எதிரானது போராட்டம் மட்டுமல்ல, அரசால், மக்களால் இந்த பிரச்சினையை சமாளிக்க, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விழிப்புணர்வு கூட்டங்களை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம். போதைப்பொருளின் ஒட்டுமொத்த வலையமைப்பையும் ஒடுக்க, போதைப்பொருள் வழக்குகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை முழுமையாக அணுக வேண்டும். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2006-2013-ம் ஆண்டில் மொத்தம் 1,257 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது 2014-2022-ம் ஆண்டில் 152 சதவீதம் அதிகரித்து 3,172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 260 சதவீதம் அதிகரித்தது.

அதாவது கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,362-ல் இருந்து 4,888 ஆக அதிகரித்தது. 2006-2013-ம் ஆண்டில் 1.52 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, இது 2014-2022-ம் ஆண்டில் 3.30 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது. 2006-2013-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு ரூ.768 கோடியாக இருந்த நிலையில், அது 2014-2022-ம் ஆண்டில் 25 மடங்கு அதிகரித்து ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கிறது. போதைப்பொருள் பயன்பாட்டை நமது நாட்டில் இருந்து ஒழிக்க பிரதமர் மோடி அரசின் பிரசாரத்திற்கு 4 தூண்கள் உள்ளன.

போதைப்பொருள் கண்டறிதல், வலையமைப்பை அழித்தல், குற்றவாளிகளை கைது செய்தல், போதைப்பொருள் பயன்பாட்டால் பாதித்தோருக்கு மறுவாழ்வு அழித்தல் ஆகிய 4 ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவை வலுப்படுத்துவது காலத்தின் தேவை. இது தவிர, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். 60 முதல் 70 சதவீத போதைப்பொருள் கடல் வழியாக கடத்தப்படுகிறது.

போதைப்பொருள் வழக்கில் பெரிய நபர்கள் கைதாகும்போது, ஒட்டுமொத்த வலையமைப்பு குறித்தும் விசாரிக்க வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையானவரை பிடிக்கும்போது, அவருக்கு அதை வினியோகம் செய்தது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களின் பிரதிநிதிகள், கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து இதே விஷயம் குறித்து பத்திரிகை அதிபர்கள், ஊடக செய்தி ஆசிரியர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதில் ‘தினத்தந்தி’ குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், ‘தினத்தந்தி’ குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் பல்வேறு பத்திரிகை அதிபர்கள், ஊடக செய்தி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.