ராகுல் காந்தி தகுதி நீக்கத்தால் கொந்தளித்த காங்கிரஸ்… நாடு முழுவதும் போராட்டம் நடத்த முடிவு!!
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்துகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை மேற்கொண்டனர்.
சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாகவும், மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:- ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை தொடர்ந்து அடுத்தகட்ட அரசியல் வியூகம் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதித்தோம். வரும் நாட்களில் நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுத்தற்காக ராகுல் காந்தியை வேண்டுமென்றே தகுதிநீக்கம் செய்ததாக நாடு முழுவதும் எடுத்துரைக்க உள்ளோம்.
பாரத் ஜோடோ யாத்திரை ஒரு பெரிய இயக்கமாக மாறியது. மேலும் அதானி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது. இதனால் பாஜக கலக்கமடைந்துள்ளது. எங்களுக்கு ஆதரவாக பேசிய எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்தை வரவேற்கிறோம். நாம் இப்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த விஷயத்தை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறார். இதை இனி வெளியிலும் செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.