இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் !! (கட்டுரை)
காலனித்துவ ஆட்சிக்கு பின்னனா இலங்கையின் அரசியல் வரலாறு என்பது மிகவும் வினோதமானது. இலங்கையின் சிங்கள அரசியலை தேரவாத பௌத்தத்தைக் கோட்பாட்டின் அடித்தளத்திலிருந்தும், புவிசார் அரசியல் கண்ணோட்டத்தினுாடகவும் நோக்குவது அவசியமானது.
மகாவம்சம் என்ற ஐதீக கதையிலிருந்து கட்டமைக்கப்பட்ட ‘தம்மதீப’ கோட்பாட்டினை மையப்படுத்தியே சிங்கள தலைவர்கள் தமக்கிடையிலான அரசியல், பொருளியல், வர்க்க, பதவி போட்டிகளையும் பிரச்சனைகளையும் அணுகுகின்றனர்.
பொதுவாக ஆதிக்கப் போட்டிகள் ஏற்படுகின்ற போது அதனைத் தமிழருக்கு எதிரான அல்லது சிறுபான்மையினருக்கு எதிரான இனவாதமாக மடைமாற்றி அரசியற் படுகொலைகளை நிறைவேற்றி தமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வர்.
இத்தகைய போக்கு இலங்கையின் பௌத்த வரலாற்றின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை தொடர்வதைக் காணலாம். அத்தகைய நிகழ் போக்கை வரலாற்றுரீதியாக இரண்டு அரசியல் படுகொலை வரலாற்று நிகழ்வுகளை நோக்குவதன் மூலம் இலங்கையின் அரசியல் போக்கினை புரிந்துகொள்ள போதுமானது.
இலங்கையின் தேரவாத பௌத்தத்தின் வரலாறு என்பது கிறிஸ்துக்கு முன் 247இல் இந்தியாவிலிருந்து வருகை தந்த மகிந்த தேரர் அனுராதபுரத்தின் மன்னனான தீசனை பௌத்தனாக மதம் மாற்றி அசோகச் சக்கரவர்த்தியின் பட்ட பேரான ‘தேவநாம்பிய’ என்ற பட்ட பேருடன் இணைத்து தேவநாம்பியதீசன் என்ற பெயரை இட்டு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட முடியை அணிவித்து அனுராதபுரத்தின் பௌத்த மன்னனாக முடிசூடப்பட்டான்.
அவ்வாறு முடிசூடப்பட்டவன் பேரளவில் மன்னனாக இருந்தானே தவிர உண்மையான முடிக்குரிய, அதிகாரத்துக்குரிய மன்னனாக அசோகச் சக்கரவர்த்தியின் மகனான மகிந்த தேரரே பௌத்த துறவி என்ற வேடத்தில் அனுராதபுரத்திலிருந்து அதிகாரம் செலுத்தினார் என்பதே உண்மையானது.
மகாநாமதேரர் இதனைக் கருத்தில் கொண்டும் அதற்கு பின்னனா தொடர் வரலாற்றில் இந்திய ஆக்கிரமிப்பு குறிப்பாகத் தமிழகத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி தமிழ் மன்னர்கள் படையெடுத்துக் கைப்பற்றியமையும், அதேபோன்று வட இலங்கை அரசர்களான உத்தர தேச மன்னர்கள் அனுராதபுரத்தின் மீது படையெடுத்து ஆட்சியைக் கைப்பற்றி அனுராதபுர மன்னர்களாக முடிசூடிக்கொண்ட வரலாற்றையும் தன் மனதில் கொண்டு இந்தியா மீதும், தமிழர்கள் மீதும் அவருக்கு இருந்த வெறுப்புணர்வுகளும்தான் கிபி ஆறாம் நூற்றாண்டில் மகாநாடு தேரரை ‘மகாவம்ச’ என்ற நூலை எழுதத் தூண்டியது. அந்த நூல் ‘தம்மதீபக்’ கோட்பாட்டை அடித்தளமாகக் கொண்டுள்ளது.
அதாவது இலங்கைத் தீவு புத்தபிரானால் பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கு என்று தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு. (யூதர்களின் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி இஸ்ரேல் போன்றது) பௌத்தத்துக்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு என்ற ஐதீகக் கதையின் விளைவுகளைச் சார்ந்து இந்த கட்டுரை எழுதும் நிமிடம்வரை இலங்கை தீவில் தொடர்ந்து தேரவாத பௌத்தர்கள் அல்லாதவர்களும் தம்மதீபக் கோட்பாட்டைக் கடைப்பிடிக்காத பௌத்தர்களும் அரசியல் படுகொலை செய்யப்படுவது தொடர்கிறது.
இந்த வகையில் இலங்கையின் முதலாவது அரசியல் படுகொலை என்பதை வரலாற்றுக் காலங்களில் பார்த்தால் அது கிபி 3ம் நூற்றாண்டின் இறுதியில் மாசேனன் காலத்தில் நிகழ்ந்தது. அன்றைய காலத்தில் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் பௌத்தத்தின் இரு பிரிவுகளான மகாசேன பௌத்தமும், தேரவாத பௌத்தமும் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தன. தேரவாத பௌத்தம் என்பது புத்தருடைய பாதச்சுவட்டையும், தந்ததா துவையும் வழிபடுகின்ற முறைமையைக் கொண்டது. அது வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.
மாகா ஞான பௌத்தம் என்பது புத்தருடைய உருவச்சிலையையும், உருவச் சிலைக்கு தூபதீபம் காட்டுகின்ற கிரியை முறைகளையும் கொண்டது. மகாசேன பௌத்தம் தென்னிந்தியாவிலும் குறிப்பாகத் தமிழர்கள் மத்தியிலும் வட இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் பெரு வளர்ச்சி அடைந்திருந்தது. அது சைவ வைதீக மதங்களின் அனைத்து வழிகாட்டு முறைகளையும் கிரியைகளையும் உள்வாங்கி இருந்த மதமும்கூட.
கிபி 3ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் தேரவாத பௌத்தத்தை வீழ்த்தி மகாசேன பௌத்தம் எழுச்சி பெற்றது மகாசேன பௌத்தத்தை அன்றைய காலத்தில் தென்னிந்தியா தமிழர்களும் வட இலங்கைத் தமிழர்களும் ஏற்றுப் பெரு வளர்ச்சி எய்தியிருந்தது. அத்தகைய எழுச்சியின் விளைவு அனுராதபுரத்தை நோக்கியும் மகாசேன பௌத்தம் பரவத் தொடங்கியது அவ்வாறு பரவுவதற்கு வித்திட்டவர் தமிழகத்திலிருந்து வருகை தந்த சங்கமித்தார் எனப்படும் தமிழ் பௌத்த துறவியாவார்.
அவர் அனுராதபுரத்தில் மகா விகாரையில் இருந்த தேரவாத பௌத்த துறவியான சங்க பாலரை சமயத்திலே தோற்கடித்தார். அதனால் அனுராதபுர மன்னன் கோத்தபாயன் மகாசேன பௌத்த தர்மத்தைப் பின்பற்றினான் . அனுராதபுரத்தில் அரச மதமாக மகாஞானத்தை சங்கமித்தர் நிலைநாட்டினார். அவருக்காகவே அனுராதபுரத்தில் ‘அபயகிரி’ என்ற மகாசேன பௌத்த விகார கட்டப்பட்டது.
அதே நேரம் தேரவாத பௌத்தர்களுடைய ‘மகாவிகாரை’ கவனிப்பாரற்று அழிவு நிலைக்குச் சென்றது. இந்தப் பின்னணியில் அனுராதபுர ஆட்சி அதிகாரத்தின் உட்பூசல்களும் அதிகாரப் போட்டியின் விளைவைச் சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி அதிகாரத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்கான சதி நடவடிக்கைகள் மகாசேனன் காலத்தில் இடம்பெற்றது.
தமிழர்கள் பின்பற்றிய மகாஞாண பௌத்தம் அனுராதபுரத்தில் நிலை பெறப்போகிறது என்ற அச்சத்தினை நாட்டு மக்களுக்குப் பரப்பிய மகாசேன மன்னனின் மூன்றாவது மனைவியாகிய அணுலாதேவியும் சங்க பாலர் என்கின்ற தேரவாத பௌத்த துறவியும் இணைந்து சங்கமித்தர் எனப்படும் தமிழ் மகாசேன. பௌத்த துறவியைப் படுகொலை செய்தனர். இதுவே இலங்கைத் தீவில் பௌத்தத்தின் பெயரால் நிகழ்ந்த முதலாவது அரசியல் படுகொலையாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.
இத்தகைய வரலாற்றுப் போக்கின் தொடர்ச்சியாகக் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை தீவின் அரசியல் அதிகாரத்தைச் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்குச் சிங்களத் தலைவர்கள் தமது சந்தர்ப்பவாத பதவி, பொருளியல் போட்டிகள் நலன்களுக்கும், தமது அற்பத்தனமான பிற்போக்குத் தனங்களுக்கும் இனவாதத்தையும் மதவாதத்தையும் கருவியாகப் பயன்படுத்தி சிறுபான்மையினருக்கு எதிரான இன வன்முறையாக மடைமாற்றி விட்டிருந்தனர்.
மலையகத் தமிழர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பிரயோகித்து சிங்கள ஆளும் குழாம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதும் பொருளியல் நலன்களை அடைவதையும் இலங்கையின் நவீன அரசியல் வரலாற்றில் காணமுடியும்.
இந்த அடிப்படையிலேதான் எஸ்.டபுள்யூ . ஆர்.டி.பண்டார நாயக்கா படுகொலையும் நிகழ்ந்தது. பண்டார நாயக படுகொலை என்பது பலபரிமாணம் மிக்கது. பௌத்தமும், மேலைத்தேச முதலாளித்துவ அதிகார வர்க்கமும், உள்ளூர் பொருளாதார ஆதிக்க போட்டியும் என மும்முனை சக்திகள் தமது நலன்களை அடைவதற்காகத் தொழிற்பட்டதைக் காணமுடிகிறது.
பண்டார நாயக்க படுகொலை என்பது வெறுமனே ஒரு பௌத்த தேரரால் கொல்லப்பட்டது என்ற செய்தி சொல்லப்படுகின்ற போதும் அதனுடைய அடி ஆழம் என்பது இந்த மும்முனை சக்திகளின் நலனிலும் இலாபத்திலும் தங்கியிருந்துள்ளது.
1956ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பண்டார நாயக்கா முன்வைத்த கோஷம் ‘நான் வெற்றி பெற்றால் 24 மணி நேரத்தில் சிங்கள மொழிச் சட்டத்தை உருவாக்குவேன் இலங்கையின் அரச மதமாகப் பௌத்தத்தை பிரகடனப்படுத்தி பௌத்த சாசன அமைச்சை உருவாக்குவேன்’ என்பனவே முக்கியத்துவம் பெற்றது. அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
சிங்கள மொழிச் சட்டத்தை நிறைவேற்றினார். அன்றைய காலத்தில் இலங்கை அரசியலில் ஜனநாயகத்துக்குப் பதிலாகப் பெரும்பான்மைவாத ஜனநாயகம் எழுச்சி பெற்றது. இதன் விளைவாகத் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றம் எனத் தொடங்கித் தனி சிங்கள மொழிச் சட்டம் என்பவற்றினால் வெகுண்ட சிறுபான்மையினர் மேற்கொண்ட போராட்டங்களைத் தணிப்பதற்காக பண்டார நாயக்க பண்டா-செல்வா ஒப்பந்தத்தை 26-07-1957இல் கைச்சாத்திட்டார்.
ஒப்பந்தத்தை எதிர்த்து 04-10-1957 களனி ராஜாகா விகாரையின் விகாராதிபதி புத்திர கித்திரதேரர் உள்ளிட்ட 200 பிக்குகளும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன உள்ளிட்ட சிங்களத் தலைவர்களும் கண்டி தலதா மாளிகை நோக்கி பாதயாத்திரை செய்தனர். இதனை அடுத்துத்தான் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என பௌத்த பிக்குகளுக்கு வாக்குறுதி வழங்கியதை அடுத்து ஒப்பந்தம் குப்பைக் கூடைக்குள் போய்விட்டது.
அதேநேரம் பண்டார நாயக்கா பெட்ரோலியம், போக்குவரத்து, பெருந்திட்டம் என்பவற்றைத் தேசிய மயமாக்கி பொருளாதார சீர்திருத்தங்களைச் செய்தார். அத்தோடு சிங்கள கிறிஸ்தவ மிஷனரியிடமும் சிங்கள கிறிஸ்தவ உயர்குலத்தின் வலுவான பிடியிலிருந்த கல்வித்துறையைத் தேசிய மயமாக்கினார்.
தனியார்த் துறை தேசிய மயமாக்கல் மூலம் பெரும் பாதிப்படைந்த கிறிஸ்தவ உயர் குழாம், கிறிஸ்தவ மிஷினரிகள், மேற்குலக முதலாளித்துவ கம்பனிகளும், முதலாளிகளும் அனைவருடைய பொது எதிரியாக பண்டார நாயக்க தென்படத் தொடங்கினார்.
அரிசி இறக்குமதிக்கான கோட்டாவை விமலா விஜயவர்த்தனா அவர்களுக்குக் கொடுக்க மறுத்தார். அன்றைய காலத்தில் விஜய வர்த்தன குடும்பம் என்பது இலங்கையின் முதல்தர செல்வந்த குடும்பமாகக் கருதப்பட்டது. விஜய வர்த்தன ரஜமகா விகாரையின் தருமகர்த்தாவும்கூட. இந்தப் பின்னணியில்தான் ரஜமகா விகாரையின் விகாராதிபதி புத்தரகித்ரதேரர், விமலா விஜயவர்த்தனவுக்காக பண்டாரநாயக்காவின் மீது வெறுப்பு கொண்டார்.
மரத்தளபாட ஏகோ போக விற்பனையாளரான ஓசி கொரியா, பண்டார நாயக்கா குடும்பத்துடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டவர். எந்த நேரத்திலும் பண்டார நாயக்கா வீட்டுக் கதவைத் திறக்க வல்லவர். அவரும் இந்த மேற்குலக சிந்தனை, வாழ்வியல் மரபைக்கொண்ட முதலாளித்துவ அணியுடன் இணைந்து கொண்டார்.
அல்லது இந்த முதலாளித்துவ வர்க்கத்தினால் கருவியாகப் பயன்படுத்தப்பட்டார். இவ்வாறு மும்முனை அணியும் இணைந்து பண்டார நாயக்க மீதான படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி முடித்தனர். இக்கொலையில் மேற்குலக புலனாய்வு அமைப்புக்களின் கைகளும் இருந்தது. இங்கே அவரவர்கள் நலன்களும் இலக்குகளும் வேறுபட்டவை.
ஆயினும் இதில் மும்முனைகளும் நலனை அடைவதற்கு பண்டார நாயக்க கொல்லப்பட வேண்டும். இந்தக் கொலையின் கருவியாக அதி தீவிர பௌத்த விசுவாசியான சோமராமதேரர் பயன்படுத்தப்பட்டார். சேமராமதேரருக்கு பண்டார நாயக்க மீதான வெறுப்பு என்னவென்றால் பௌத்த சாசன அமைச்சை உருவாக்காமல் தட்டிக் கழிக்கிறார் என்பதுதான்.
எனவே அவருக்கு இருந்த பௌத்தத்தின் மீதான விசுவாசத்தை தமக்குச் சாதகமாக இந்த மும்முனை அணிகளும் பயன்படுத்தி, சிறுபான்மையினருக்கு உரிமைகளை பண்டார நாயக்க வழங்குகின்றார் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி சோம ராம தேரரைத் தூண்டி பண்டாரநாயக்கவை சுட்டுக் கொல்ல திட்டமிடப்பட்டது.
25-09-1959 அன்று காலை 10 மணி அளவில் பிரதமரைச் சந்திப்பதற்கு என்று கூறிக்கொண்டு சென்ற சோமராம் தேரர் தனது கைத்துப்பாக்கியால் சுட்டார். படுகாயம் அடைந்த பண்டார நாயக்க சரிந்து விழுந்தார். அப்போதுகூட பண்டார நாயக்கா பௌத்த துறவியை ஒன்றும் செய்யாதீர்கள் என்றுதான் குறிப்பிட்டாராம். காவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சோமராம் தேரர் ஆவேசமாக ‘நான் சிங்கள இனத்தையும் பௌத்த மதத்தையும் காப்பாற்றுவதற்காகவே பிரதம மந்திரியைச் சுட்டேன்’ எனக் கத்தினார்.
அந்த அமளிதுமளியில் இன்னும் ஒரு நபர் பண்டாரநாயக்காவின் இல்லத்தின் பின்புற மதிலால் ஏறிப்பாய்ந்து தப்பித்தார் என்றும் சாட்சியம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தக் குறித்த நபர் யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. படுகாயமடைந்த பண்டார நாயக்க 22 மணித்தியாலங்கள் உயிருக்காகப் போராடி மறுநாள் 26ஆம் திகதி காலை 8 மணி அளவில் மரணமடைந்தார். ஆனால், இந்தக் கொலைக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகளும் அதனுடைய பின்புலங்கள் பற்றியும் அன்றைய காலத்தில் பெரிய அளவில் விசாரிக்கப்படவுமில்லை அவை வெளிக்கொணரப்படவும் இல்லை.
இந்த வழக்கில் கொலைக் குற்றத்தைச் செய்யத் தூண்டியதற்காக புத்தரகித்தர தேரருக்கு ஆயுள் காலச் சிறைத் தண்டனையும் கொலைக் குற்றம் செய்த சோமராம் தேருக்கு மரணதண்டனையும் வழங்கப்பட்டது.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்னர் சோமராம் தேரர் தன்னை ஒரு கிறிஸ்தவனாக மதமாற்றி பீட்டர் என்ற கிறிஸ்தவ மத பெயரையும் சூட்டிக்கொண்டார். அவர் தூக்குக் கயிற்றில் தொங்கியபோது பீட்டர் என்ற பெயருடைய ஒரு கிறிஸ்தவனாகவே மரணித்தார். அவருடைய மரணச் சடங்கும் கிறிஸ்தவ முறைப்படியே நடைபெற்றது.
இங்கு இந்த விடயத்தை மிக ஆழமாகக் கவனிக்க வேண்டும். பௌத்த துறவிகளும், சிங்கள பௌத்தர்களும் பௌத்த மதத்திற்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படக் கூடாது என்பதிலும், ஒரு பௌத்த பிக்கு தூக்குக் கயிற்றில் தொங்கக்கூடாது என்பதானாலுமே இவ்வாறு கிறிஸ்தவராக மாறித் தூக்கை எதிர்கொண்டார். பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு அவர்கள் எத்தகைய செயலையும் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பௌத்தம் என்பது தனது இலக்கில் உறுதியாகவும், வேகமாகவும் தொழிற்படுகிறது என்பதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மகாநாடு தேரரால் கட்டமைக்கப்பட்ட மகாவம்சம் என்கின்ற ஐதீக கதையின் அடிப்படையில் இன்றைய பௌத்த மகாசங்கங்கள் தம்மதீப கோட்பாட்டை விஸ்தரித்தும் வலுப்படுத்தியும் வருகிறது.
தம்மதீபக் கோட்பாட்டுக்கும், நலங்களுக்கும் பாதிக்காத அந்நிய செல்வாக்குகளையும் மாற்றங்களையும் தனது வளர்ச்சிக்காக ஏற்றுக் கொண்டு தன்னை மறுசீரமைப்புச் செய்யும் அதே நேரத்தில் தனது நலனைப் பாதிக்கின்ற அந்நிய தலையீடுகளையும் அந்நிய பண்பாட்டு உட்பாச்சல்களையும் சிறுபான்மையினரின் செயற்பாடுகளையும் அது மிக வலிமையோடு எதிர்க்கும். இதற்கு உதாரணமாக இன்று இலங்கையில் இருக்கின்ற தேரவாத பௌத்தம் என்பது பேரளவிலானதாகவே உள்ளது.
ஆனால் நடைமுறையில் அது மகாஞான பௌத்தத்தினுடைய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாகவே உள்ளது. இதனைப் பார்க்கின்ற போது இந்திய, தமிழ் செல்வாக்கு என்பனவற்றிற்குத் தன்னை இசைவாக்கி சங்கத்தையும் பௌத்தத்தையும் வளர்ப்பதையும் அதன் நலனைத் தொடர்ந்து பேணுவதையும் அறியலாம்.
இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி இலங்கை தீவில் பௌத்தத்தின் பெயரால் ஆக்கிரமிக்க அவ்வாறு அசோகனால் பிரயோகிக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்குச் சின்னமான பௌத்தத்தையே தாம் உள்வாங்கி அதை இன்று தமக்குக் கவசமாக்கி, கேடயமாகப் பயன்படுத்தி, சிங்கள இனம் தன்னை தற்காத்து, தகவமைத்துக் கொண்டிருக்கின்றது என்ற வரலாற்று அறிவை தமிழ் மக்களும் தமிழ் தலைவர்களும் புரிந்து கொண்டால் மாத்திரமே இலங்கை தீவில் தமிழ் மக்களுக்கான சுபிட்சமான நிலையான அரசியல் எதிர்காலத்திற்கான வழியைத் தேடமுடியும்.