வடகொரியா இன்றும் ஏவுகணை சோதனை நடத்தியதால் பதற்றம்!!
வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக எல்லைப்பிரச்சினை தொடர்பாக பகை இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இருநாட்டு படைகளும் ஒன்றாக இணைந்து மிகப் பெரிய அளவிலான ராணுவ பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இது வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறி அந்நாடு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 11 முறை சோதனை நடத்தி உள்ளது.இந்த வாரம் மட்டும் 7- வது தடவையாக ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது.சில நாட்களுக்கு முன்பு நீருக்கடியில் அணு ஆயுத சோதனை மூலம் செயற்கையான சுனாமியை உருவாக்கி மற்ற நாடுகளை அச்சுறுத்தியது. இந்த நிலையில் இன்று காலை வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய 2 குறுகிய அளவிலான பாலிஸ்டிக் சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம் சாட்டி உள்ளது.
கிழக்கு கடற்கரையை நோக்கி ஜூங்குவா மாகாண பகுதியில் நடந்த இந்த சோதனையின் போது தனது இலக்கை ஏவுகணைகள் தாக்கியதாக தெரிய வருகிறது. ஒருபுறம் வடகொரியா இதுவரை இல்லாத வகையில் ஏவுகணை சோதனை நடத்தி வருவதும், மறுபுறம் தென் கொரியா-அமெரிக்கா கூட்டுப்படையினர் மிகப் பெரிய அளவிலான பயிற்சியினை நடத்துவதாலும் கொரியா தீபகற்பம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.