ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலி; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பலர் பலியாகி வருகின்றனர். இந்நாட்டு தலைநகர் காபூலில் உள்ள கார்டா பர்வான் பகுதியில் அதிகளவில் இந்துக்களும், சீக்கியர்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில்; மாலிக் அசார் சதுர்க்கம் அருகே அமைந்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி இன்று உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார். அந்த நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வருவதை அறிந்த பாதுகாப்பு படையினர் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அப்போது, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பயங்கரவாதி வெடிக்கச் செய்தார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்பு படையினர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.