கல்வி அமைச்சின் முக்கிய தீர்மானம் !!
இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள பதிவு செய்யும் கடிதங்களை வெளியிடாது இருக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பத்திரத்திற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
எனவே, முதலாம் ஆண்டிற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கைகளும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையைத் தொடர்ந்து தரம் 6 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளும் தற்போது நடைபெற்று வருவதால் சித்திரைப் புத்தாண்டிற்குப் பின்னர் இது தொடர்பான அறிவித்தல் வெளியாகும் என அவர் தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட சேர்க்கைகள் முடிந்தவுடன் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்தார்.
மாதிரி விண்ணப்பப் படிவம் ஒன்று ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் பொது அறிவிப்பு மூலம் வெளியிடப்படும். நிரப்பப்பட்ட படிவங்கள் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை இணைக்க விரும்பும் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுற்றறிக்கையின் படி ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
புதிய அமைப்பின் பிரகாரம் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை பாடசாலையில் இணைக்க கல்வி அமைச்சிற்கு வந்து தமது நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை.