சேவூர்சக்தி மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது!!
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள சேவூர் சக்தி மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் பங்குனி திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கம்பம் நடுதல் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி காலை, இரவு நேரங்களில், சாமிக்கு அபிஷேக ஆராதனைகளும், அதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகளும் நடைபெற்றது.
தினசரி காலை 8 மணிக்கு பூவோடு எடுத்தல், இரவு நேர பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தினசரி இரவு பெரியவர்கள், இளைஞர்கள் கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணிக்கு அம்மை அழைத்தல், காலை 6 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சேவூரில் உள்ள ராஜவீதி, கோபி மெயின் ரோடு, வடக்கு வீதி, ஐஸ்கடைவீதி, தெற்கு சேவூர் மற்றும் ராக்கம்பாளையம் பொதுமக்கள் என சுமார் 750-க்கும் மேற்பட்டோர் மாவிளக்கு எடுத்து வந்து சக்தி மாரியம்மனை வழிபடுகிறார்கள்.
அதையடுத்து காலை 9 மணிக்கு, பூவோடு எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இரவு 7 மணிக்கு கம்பம் களைதல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள், (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில், நாளை பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்படும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.